Pan 2.0: `QR Code உள்ள புதிய பான் கார்டு’ – எப்படி, எதில் விண்ணப்பிக்க வேண்டும்?

பான் 2.0 திட்டத்தின் படி, நமது பான் கார்டுகளில் QR CODE இடம்பெற உள்ளன. இது பான் கார்டு மூலம் நாம் பெற உள்ள சேவைகளை எளிதாக மாற்ற உள்ளது. அதனால், புதியதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு QR CODE உடன் கூடிய பான் கார்டு கிடைக்கும்.

நான் ஏற்கெனவே பான் கார்டு வைத்திருக்கிறேன் என்பவர்கள், புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம்… பான் கார்டு ரீ-பிரின்ட்டிற்கு மட்டும் விண்ணப்பித்தால் போதுமானது. அது எப்படி என்று பார்க்கலாம்… வாங்க…

பான் கார்டு ரீ-பிரின்ட்டிற்கு விண்ணப்பிக்க வலைதளத்திற்குள் செல்வதற்கு முன்பு, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது…

பழைய பான் கார்டு டு புதிய பான் கார்டு!

வருமான வரித்துறை Protean, UTIITSL ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு பான் கார்டுகளை வழங்குவதற்கும், அதை அப்டேட் செய்வதற்குமான அதிகாரத்தை வழங்கி உள்ளது. இதில் நீங்கள் எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அது மிகப்பெரிய விஷயம் அல்ல. உங்களது பான் கார்டை திருப்பிப் பார்த்தாலே, நீங்கள் எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Protean-ல் விண்ணப்பிக்க வேண்டியவர்கள் www.onlineservices.nsdl.com என்ற வலைதளத்திற்குள்ளும், UTIITSL-ல் விண்ணப்பிக்க வேண்டியவர்கள் www.pan.utiitsl.com என்ற வலைதளத்திற்குள்ளும் செல்ல வேண்டும்.

இப்போது வரும் பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் பான், ஆதார், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை நிரப்பியப்பின் ‘சப்மிட்’ கொடுக்கவும்.

அதன் பின் திறக்கும் பக்கத்தில் வரும் அனைத்து தகவல்களையும் சரிப்பார்த்த பிறகு, இ-மெயில், மொபைல் போன் அல்லது இரண்டிற்கும் – இப்படி எதில் OTP வர வேண்டும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர், பான் கார்டு வர வேண்டிய முகவரியையும் டிக் செய்துகொள்ளுங்கள்.

புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு…

அதன் பின்னர், ‘Generate OTP’ கொடுத்தால், OTP வரும். அதைப் பதிவு செய்தப்பின், ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதன் பின் வரும், ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

அடுத்த 24 மணி நேரத்தில், அதே வலைதளத்தில், நீங்கள் உங்களது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

15 – 20 நாட்களில் புதிய பான் அட்டை உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்.

குறிப்பு: உங்களது பான் கார்டில் எதாவது மாற்றப்பட வேண்டும் என்றாலோ, பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலோ, புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே, அவற்றை செய்து கொள்வது நல்லது.