சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதன் மூலம் சிரியாவில் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.
பஷார் அல் ஆசாதை ஆட்சியை விட்டு அகற்ற 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்கள், கடந்த 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.
அரபு நாடுகளில் 2010-11 இடையே நடந்த எழுச்சி போராட்டங்களின் ஒரு பகுதியாக சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. ஆனால் பின்னாட்களில் அது ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஒரு ரத்தக்கறை படிந்த ஒரு மிகப் பெரிய மோதலாக உருவெடுத்தது. இதில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் கிளர்ச்சியாளர்கள் படை சிரியாவின் வடமேற்கு பகுதியின் பெரும்பாலானவற்றை கைப்பற்றியது. முதலில் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் மிகப் பெரிய நகரமான அலெப்போ பிறகு, ஹமா மற்றும் ஹாம்ஸை கைப்பற்றினர். ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் நுழைந்து எந்தவொரு சண்டையும் இன்றி அதனை கைப்பற்றினர்.
இதனையடுத்து சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை சிரிய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வந்தது. 2011-ஆம் ஆண்டு தொடங்கிய மோசமான உள்நாட்டுப் போரின் மையமாக அதிபர் ஆசாத் இருந்து வந்தார். ஷியா பிரிவின் ஒரு கிளையான அலவைட் பிரிவைச் சேர்ந்த ஆசாத்தின் குடும்பம் கடந்த 1970 முதல் சிரியாவின் ஆட்சி பீடத்தில் இருந்து வருகின்றனர்.

ஆரம்ப நாட்களில் ஆசாத் தன்னை ஒரு நவீன சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்டாலும், அரபு எழுச்சிப் போராட்டங்களின் போது நடந்த அமைதிப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியே வந்தார். இது நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பல தசாப்தங்களாக போராட்டக்காரர்களை ஆசாத் குடும்பம் அடைத்து வைத்து சித்ரவதை செய்துவந்த சிறைச் சாலைகள் பலவற்றையும் கிளர்ச்சியாளர்கள் குழு கடந்த வாரம் கைப்பற்றியது.
இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் சன்னி பிரிவை சேர்ந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற அமைப்பே பிரதான மூளையாக செயல்பட்டது. இந்த அமைப்பின் பெயருக்கு லெவன்ட் விடுதலைக்கான அமைப்பு என்று அர்த்தம். லெவன்ட் என்பது சிரியா, ஜோர்டன், பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.
சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2012-ம் ஆண்டில் அல் நுஸ்ரா முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆசாத் படைகளுக்கு எதிராக களமிறங்கியது. இந்தக் குழுவின் நோக்கம் பஷார் அல் ஆசாத்தை ஆட்சியை விட்டு அகற்றி, ஐஎஸ்ஐஎஸ் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதுதான். இந்தக் குழு தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தற்கொலைப் படை தாக்குதல்களில் ஈடுபட்டது.

முதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்தக் குழு பின்னர் அல்-காய்தா உடன் கைகோத்தது. ஆனால் 2016-ஆம் ஆண்டில், இந்த நுஸ்ரா முன்னணி தன்னுடைய பயங்கரவாத அடையாளங்களை துடைத்தெறிந்து விட்டு, மற்ற சில அமைப்புகளுடன் சேர்ந்து ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (ஹெச்டிஎஸ்) அமைப்பை நிறுவியது. எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதனை இப்போதும் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன.
இந்தக் குழுவின் தலைவராக இருக்கும் அபு முஹம்மது அல் ஜோலானி சிரியாவிலிருந்து சவூதிக்கு நாடுகடத்தப்பட்ட பெற்றோருக்கு பிறந்தவர். 1980-களில் பிற்பகுதியில் அவரது குடும்பம் மீண்டும் சிரியாவுக்கு குடிபெயர்ந்தது. 2003-ஆம் ஆண்டில் ஜோலானி தனது அண்டை நாடான ஈராக் சென்று அங்கு அல்-காய்தா அமைப்பில் இணைந்து அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக சண்டையிட்டார்.

இதனால் பல ஆண்டுகளை ஈராக்கின் சிறைகளில் கழித்த அவர், பின்னர் சிரியாவுக்கு திரும்பி அங்கு நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது நுஸ்ரா முன்னணியை உருவாக்கினார். அதுவே பின்னாட்களில் ஹெச்டிஎஸ் அமைப்பாக பரிணமித்தது. அஹமத் அல் ஹூசைன் அல் – ஷாரா என்ற இயற்பெயரை கொண்டிருந்த அவர், ஹெடிஎஸ் அமைப்பின் எழுச்சிக்குப் பிறகு தன் பெயரை அபு முஹம்மது அல்-ஜோலானி என்று மாற்றிக் கொண்டார்.
2016-ஆம் ஆண்டில் அல்-காய்தா உடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிறகு, ஜோலானியும் அவரது குழுவும் ஹெச்டிஎஸ் என்ற பெயரில் தங்களுடைய உலகளாவிய பயங்கரவாத லட்சியங்களைத் தவிர்த்து, சிரியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயன்றது. தற்போது இந்த அமைப்புதான் சிரியாவின் முக்கிய கிளர்ச்சியாளர்கள் குழுவாக இருந்து வருகிறது.
இன்னொரு புறம் சிரியாவின் குர்திஷ் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்த படைகள் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக சிரியா ஜனநாயகப் படை என்ற பெயரில் அமெரிக்காவால் களமிறக்கிவிடப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் வீழ்த்தப்பட்ட பிறகு குர்திஷ் படைகள், வடகிழக்கு நகரங்களில் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவி, அங்க தாங்கள் கட்டமைத்த தன்னாட்சியை விரிவுப்படுத்தியது. இவர்களின் முக்கிய எதிரி துருக்கி படைகள் தான்.

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் இருந்தே, துருக்கி ராணுவம் சிரியாவின் குர்திஷ் படைகளுக்கு எதிராக, எல்லையைத் தாண்டி பல தலையீடுகளை செய்துவந்தது. துருக்கி படைகள் தற்போது சிரியாவின் வடக்கு எல்லையில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
அத்துடன் சிரியாவில் உள்ள ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களின் சில பிரிவுகளையும் துருக்கி ஆதரிக்கிறது. ஹெடிஎஸ் கிளர்ச்சியாளர்களின் தற்போதைய தாக்குதலுக்கும் கூட துருக்கியின் மறைமுக உதவி இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா, சிரியாவின் உள்நாட்டுப் யுத்தம் முழுவதும், ரஷ்யா ஆசாத் குடும்பத்தின் மிகவும் விசுவாசமான அயல்நாட்டு ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வந்தது. ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக துருப்புக்களை அனுப்பியது மட்டுமின்றி எதிரிகள் மீது குண்டு வீசுவதற்காக ஜெட் விமானங்களையும் கொடுத்து உதவியது. எனினும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு சிரியாவில் ரஷ்ய படைகளின் எதிர்காலம் என்பது கேள்விக் குறிதான்.

அமெரிக்கா
சிரியா உள்நாட்டு போரில் அமெரிக்காவின் பங்களிப்பு என்பது பலமுறை மாறியிருக்கிறது. ஒபாமா ஆட்சிகாலத்தில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததுடன் ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது. ஆனால் 2014-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்குப் பிறகு, அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல்கள் மற்றும் குர்திஷ் படைகளுக்கு உதவி செய்வது போன்ற செயல்பாடுகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து சண்டையிட்டது. 2019-ஆம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றார்.
சிரிய அரசின் வீழ்ச்சியத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் எதிர்காலம் போன்றவற்றின் நிலை குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தி, ஒரு அதிகார வெற்றிடம் ஏற்படாமல் தடுக்க முயல்வார்கள். ஆனாலும் எவ்வளவு தூரம் அவர்களால் தங்களுடைய அதிகாரத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த முடியும் என்பதும், ஆசாத்தை வெளியேற்றிய கிளர்ச்சியாளர்களால் எவ்வளவு காலம் ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்பது கேள்விக்குறியே!














2011-ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிரான அமைதிப் போராட்டமாக தொடங்கிய இது, ஆயுதமேந்திர கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், அயல்நாட்டு தலையீடு ஆகியவற்றால் இன்று ஒரு மிகப் பெரிய சிக்கலான யுத்தமாக தலையெடுத்து நிற்கிறது. இதன் விளைவாக இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, எண்ணற்ற மக்கள் தங்கள் உடைமை, உறைவிடங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

1970-களில் பஷார் அல் ஆசாத்தின் தந்தை ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டு காலமாக நீடித்து வந்த ஆசாத் குடும்ப ஆட்சி, கிளர்ச்சியாளர்களின் 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிரப் போராட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
