தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் புள்ளமங்கை மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பஸ் ஒன்றில் டிரைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சமயத்தில் மூன்று பேர் சேர்ந்து சிவமணிகண்டனை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து அய்யம்பேட்டை போலீஸார் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரேசன், ராகுல், பரமேஸ்வரன், சுமார்ட் விக்கி (என்கிற) ஹமதீபன், கரன், தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த கட்டை (என்கிற) கதிர்வேல் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுவன் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில் சுந்தரேசன், ராகுல், பரமேஸ்வரன் ஆகிய மூன்று பேர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட டிரைவர் சிவமணிகண்டன் கொடுத்த புகார் தொடர்பாக அய்யம்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிமதி முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு கிளம்பியது. இதைத்தொடர்ந்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் சிலரிடம் பேசினோம், “அய்யம்பேட்டை பகுதியில் பரவலாக கஞ்சா விற்பனை நடக்கிறது. சிவமணிகண்டன் வசித்த பகுதியில் சுந்தரேசன் தரப்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

அந்த வீட்டுக்கு சந்தேகப்படும் வகையில் பலர் வந்து சென்றுள்ளனர். மூட்டையை இறக்குவது, எடுப்பதுமாக இருந்து வந்தனர். கஞ்சா வைத்து எடுத்துச் செல்வதை அறிந்த சிவமணிகண்டன் தரப்பு இந்த வீட்டில் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரசேன் தரப்பை சேர்ந்த ஒருவன், ஒரு மாதத்திற்கு முன்பு பட்டாக்கத்தியுடன் வந்து தெருவில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யாரும் எதுவும் கேட்க கூடாது, சத்தமில்லாமல் இருக்கணும், இல்லைன்னா நடக்குறத வேறனு சத்தம் போட்டுள்ளான்.
பட்டாக்கத்தியுடன் இருந்த அவனை சிவமணிகண்டன் தரப்பு பிடித்து போலீஸில் கொடுத்தனர். ஆனால், அவன் மீது முறையாக நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் அனுப்பி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவ்வப்போது சிவமணிகண்டனிடம் சுந்தரேசன் தரப்பு பிரச்னை செய்து வந்தது. இதே போல் கடந்த 6-ம் தேதி இரவு பெட்ரோல் பங்கில் சிவமணிகண்டனை தாக்கச் சென்றுள்ளனர். இதைதொடர்ந்து அன்று இரவே தொடர்ச்சியாக அந்த கும்பல் என்னை மிரட்டுகின்றனர். என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்னை கொலை செய்து விடுவார்கள் நடவடிக்கை எடுங்கள் என அந்த கும்பல் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவிமதி உடனே அவர்களை அழைத்து விசாரித்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. அலட்சியமாக இருந்துள்ளார். அதை செய்யாததால் மறுநாள் 7-ம் தேதி மாலை சுந்தரேசன், ராகுல், பரமேஸ்வரன் கும்பல் சிவமணிகண்டனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் கொடுத்த சிவமணிகண்டன் கொலை செய்யப்பட்டதற்கு போலீஸ் அலட்சியமே காரணம் என புகார் கிளம்பியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்” என்றனர்.