விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை கடந்த வெள்ளியன்று வெளியிட்டன. த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொண்ட இந்த நூல் வெளியீட்டு விழாவில், வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா, “மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது.

உங்களுக்கு 25 சதவிகிதம்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் பெரிய கட்சி என்று சொல்ல முடியும். மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள்.” என்று பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், வி.சி.க-வுக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் விளக்கமளித்த அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “கட்சிக்குள் ஆலோசித்த பிறகே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று நேற்று தெரிவித்தார்.
இவ்வாறிருக்க, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண உதவி வழங்க திருமாவளவன் உட்பட வி.சி.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் முதலைச்சரை சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து அவரை ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து நிவாரண உதவிக்கான காசோலையை அவரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால கருத்துகளால் கட்சியின் நன்மதிப்புக்கும், தலைமையின் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதுதொடர்பாக, அவரை அறிவுறுத்தியபோதும் அவருடைய அண்மை நிகழ்வின் பேச்சு, கட்சியின் நன்மதிப்புக்கும், தலைமையின் நம்பகத்தன்மைக்கும் எதிராக அமைந்த சூழலில்தான், கட்சித் தலைமையில் கலந்தாய்வு செய்து ஆறு மாத காலத்துக்கு அவரை இடைநீக்கம் செய்திருக்கிறோம்.
இதன்பிறகு அவர் விளக்கம் தருவார். அவர் எங்களை அணுகுவதற்கான காலம் இருக்கிறது. பலமுறை கூறியும் இதுபோல் நடந்திருப்பதால், அவசர தேவையின் அடிப்படையில் நடவடிக்கையாக இதை மேற்கொண்டிருக்கிறோம். தி.மு.க தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. நான் எடுத்த முடிவு சுதந்திரமாக எடுத்த முடிவு. த.வெ.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் எந்த மோதலும் இல்லை. ஆனால், விஜய்யோடு ஒரே நிகழ்வில் நாங்கள் பங்கேற்கிறபோது, எங்களின் கொள்கைப் பகைவர்கள் எங்களுக்கெதிராகக் கதை கட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து, எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு அது. அவரோடு நிற்பதை வேறெந்த தவறான கோணத்திலும் நாங்கள் அணுகவில்லை. சிலர் அதைத் திட்டமிட்டு சர்ச்சையாக மாற்றினார்கள்.
அண்ணாமலை முதலில், பா.ஜ.க அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா, மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சொல்லட்டும். அதன்பிறகு நான் அவருக்குப் பதில் சொல்கிறேன். மாற்று எண்ணம் கொண்ட தலைவர்கள் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், அதற்கான ஆரோக்கியமான சூழல் தமிழ்நாட்டு அரசியலில் இல்லை. ஒரு தமிழ் நாளேடு, எதோ நடக்கக் கூடாதது நடக்கப்போகிறதென்பதைப் போல தலைப்புச் செய்தியிட்டு, `டிசம்பர் 6 தமிழக அரசியலில் திருப்பம். விஜய் – திருமா ஒரே மேடையில்’ என்று அதைப் பூதாகரப்படுத்தினார்கள். அவர்கள்தான் இந்த சர்ச்சைக்குத் தொடக்கப்புள்ளி வைத்தார்கள். அதனால், நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.” என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
