EWS: “பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கே எதிரானது” – முன்னாள் நீதிபதி நாரிமன் காட்டம்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் ஃபலி நரிமன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் புறக்கணிக்கப்பட்டது தவறானது என விமர்சித்துள்ளார்.

103வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து அவர் பேசியதாவது, “இந்த பொருளாதார அளவுகோல் முன்வைத்து வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக மட்டுமல்ல, வேறு எந்த கொள்கைகள் அடிப்படையில் நோக்கினாலும் தவறானதே. சொல்லப்போனால் இது ஆர்டிகள் 46, ஆர்டிகள் 15(1) மற்றும் 16(1) ஆகியவற்றுக்கு நேர் எதிரானது.” என்றார்.

இடஒதுக்கீடு

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொது வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது மத்திய பா.ஜ.க அரசு. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகிய மூவரும் மத்திய அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.

அன்றைய தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி பட் ஆகியோர் EWS-க்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து அடிப்படையில் EWS சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சட்டத் திருத்தம் 103 ஆர்டிகள் 46-ஐ பின்பற்றுவதாகக் கூறப்படும் நிலையில், “உண்மையாக இடஒதுக்கீடு யாருக்காகக் கொண்டுவரப்பட்டதோ (BC/ SC/ST பிரிவினர்) அவர்களை விலக்குவதன் மூலம் EWS அரசியலமைப்பை தலைகீழாகத் திருப்புகிறது. மேலும் யாருக்காக இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லையோ அவர்களுக்கு வழங்கப்படுகிறது” எனப் பேசியுள்ளார் நரிமன்.

நீதிபதிகள்

மேலும் அவர் “அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகள் 46 பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை முன்மொழியவில்லை” என்பதையும் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.

அத்துடன், “நம் சமூகத்தில் வரலாற்று ரீதியாக எந்த தவறும் நடந்திருக்கவில்லை எனில் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரும் தேவையே இருந்திருக்காது. ஆனால் இந்த வரலாற்றுத் தவறுகளால் பாதிக்கப்படாதவர்களுக்கு நீங்கள் இடஒதுக்கீடு வழங்குகிறீர்கள். வரலாற்று ரீதியான தவறுகளால் துன்பப்பட்டவர்களைப் புறக்கணித்துள்ளீர்கள்” என்று சாடினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01