ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ். அதன் நோக்கம் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுப்பதுதான். இவர் பல்வேறு நாடுகளின் அரசியலில் திரைமறைவாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது பலகோடி செலவு செய்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதற்கு வழிவகை செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரியில் ஜார்ஜ் சோரஸ், “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தாக வேண்டும். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.

இதனால் பா.ஜ.க-வினர் கடுப்பாகிவிட்டனர். அப்போது கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை தகர்க்க விரும்புகிறார். இந்திய அரசு அவரின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால் அவர் பொருளாதார போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி செய்கிறார். இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் இந்தத் தருணத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கி இருப்பது, இந்தியா மீதான போர்” என்றார்.
இதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “முதியவர், பணக்காரர், கொள்கை பிடிவாதமுள்ள ஜார்ஜ் சோரஸ் நியூயார்க் நகரில் அமர்ந்து கொண்டு உலகம் இன்னமும், தங்களின் கருத்துகள் படியே இயங்க வேண்டும் என விரும்புகின்றார். இந்த மாதிரியானவர்கள் கதைகளைக் கட்டமைக்க செல்வத்தை பயன்படுத்துகின்றனர். இவரைப் போன்றவர்கள் எல்லாம், அவர்களுக்கு விருப்பமானவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அதனை நல்லது என்பார்கள். மாறாக தேர்தல் எதிர்மறையான முடிவினைத் தந்திருந்தால் அதனை ஜனநாயக குறைபாடு என்பர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் பிரதமர் மோடியை நான் ஜனநாயகவாதியாக பார்க்கவில்லை என்கிறார். முன்பு நாங்கள் லட்சக்கணக்கான முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறிக்கப்போவதாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை” என்றார்.
இதேபோல் கடந்த ஆகஸ்டில் பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், “அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு அவரே பெருமளவில் நிதியுதவி செய்கிறார். அவரின் தூண்டுதலின்பேரில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் ஏஜென்டாக ராகுல் காந்தி செயல்படுகிறார். பிரதமர் மோடி மீதான வெறுப்பால் தாய்நாட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுகிறார். அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.” என்றார்.
இந்த சூழலில்தான் பாஜக தற்போது வெளியிட்ட அறிக்கையில், “எப்.டி.எல் – ஏ.பி எனப்படும் ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்கள் மன்றத்தின் துணை தலைவராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருக்கிறார். இந்த அமைப்புக்கு அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது. எப்.டி.எல் – ஏ.பி அமைப்பு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த அமைப்புடன் சோனியா தொடர்பு வைத்திருப்பது, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கையும், அத்தகைய தொடர்புகளின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. சோனியா தலைமையில் செயல்படும் முன்னாள் பிரதமர் ராஜீவின் தொண்டு நிறுவனம், ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.

சோரஸ் நிதியுதவி அளிக்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவரான சலீல் ஷெட்டி, ராகுலின் பாரத ஒற்றுமை அமைதி யாத்திரையில் பங்கேற்றுள்ளார். தொழிலதிபர் அதானி குறித்த ராகுலின் நேரடி பேட்டியை ஜார்ஜ் சோரஸ் நிதி அளிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓ.சி.சி.ஆர்.பி எனப்படும் புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதானி மற்றும் பிரதமரை விமர்சனம் செய்ய இந்த அமைப்பை ராகுல் ஓர் கருவியாக பயன்படுத்துகிறார். இது நம் நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை காட்டுகிறது. காங்கிரஸ் எம்.பி சசி தரூரோ, ஜார்ஜ் சோரஸ் தன் பழைய நண்பர் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இது கவனிக்கத்தக்க ஒன்று” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், “அதானி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பு இருக்கிறது. அதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்புவதால், அவர்கள் இப்படியெல்லாம் பேசி வருகிறார்கள். அப்படிதான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தியாக தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.க-வினர் இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
