கோவை மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகிறார். சுகந்தி மகளிருக்கு தொழில் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுக்கும் பணிகளை செய்து வருகிறார்.

அவருக்கு செலக்கரிசல் கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சுகந்தியிடம் 50 பைசா வட்டிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சுகந்தி சிறிய தொகைகளை கடனாக வாங்கியுள்ளார்.
தொடர்ந்து விஜயா, “வெளிநாட்டில் இருந்து பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோடிக்கணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் தருகிறார்கள். நான் வாங்கித் தருகிறேன்.” என்று கூறி பலரை ஏமாற்றியுள்ளார்.

இதற்காக விஜயா, சுகந்தி மற்றும் அவரது குழுவினரிடம் இருந்து மொத்தம் ரூ.15 லட்சத்தை முன்பணமாக பெற்றுள்ளார். அதனுடன் நிற்காமல், “ரூ. 6.5 கோடி நிதி வந்துள்ளது. அதை பெறுவதற்கு ஒரு சதவிகிதம் கமிஷனாக ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இதையும் நம்பி சுகந்தி, விஜயாவிடம் பணத்தை கொடுத்துள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த அன்பழகனிடம் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று விஜயா சொல்லியுள்ளார். அன்பழகனிடம் அதை வாங்கி பார்த்தபோது, அது வெறும் காகிதம் என்பது தெரியவந்தது.

கட்டு கட்டான காகித நோட்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகந்தி சூலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் விஜயாவின் ஏஜென்ட் அன்பழகனை கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள விஜயாவை தேடி வருகிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/PorattangalinKathai