“டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், பதவியில் இருக்க மாட்டேன்!” – சபதமிட்ட ஸ்டாலின்.. அனல் பறந்த சட்டமன்றம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலையில் கூடியது. அப்போது, டங்ஸ்டன் விவகாரத்தில் நீர்வளத்துறை மற்றும் கனிமங்கள், சுரங்கங்கள் துறை அமைச்சர் துரைமுருகன், “ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.” என்று தீர்மானம் கொண்டுவந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதைத்தொடர்ந்து, தீர்மானத்தின்மீது உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுரங்கம் மற்றும் கனிமங்கள்: வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2023, 17-08-2023 முதல் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் 2023 செப்டம்பர் மாதமே கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இந்த சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போதே தி.மு.க எம்.பி-க்கள் தடுத்திருக்கலாம். அதைச் செய்ய இந்த அரசு தவறிவிட்டது. பிப்ரவரி மாதமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுவிட்டது. 10 மாதங்களாக என்ன செய்தீர்கள்? சட்டம் நிறைவேறிய பிறகு, இப்போது தீர்மானம் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறீர்கள்.” என்று கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “எங்கள் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இதைக் கடுமையாக எதிர்த்தனர். நாடாளுமன்றம் கூடி கலைகிறதே தவிர, தொடர்ச்சியாக நடந்த மாதிரி தெரியவில்லை. மேலும், சட்டம் நிறைவேறியதென்றால் எங்களுடைய ஆதரவினாலா நிறைவேறியது? மெஜாரிட்டியாக அவர்கள் (பாஜக) இருக்கும்போது, எங்களால் தடுத்துவிட முடியுமா… அதேசமயம் அவர்கள் ஏலம் விட்டாலும் சரி, அதற்குரிய அனுமதியை இந்த அரசு தராது என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

நான் முதலமைச்சராக இருக்கின்ற வரையில் ஒன்றிய அரசால் இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் முதலமைச்சர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்.” என்று கூறினார்.

அதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதோடு, சட்டமன்றக் கூட்டம் நிறைவுபெற, நாளை காலை 9:30 மணிக்கு சட்டமன்றம் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal