சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 5 வது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (24). இவர் மீது தி.மு.க பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அறிவழகனைப் பிடிக்கப் புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அறிவழகனை போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்குச் சென்றனர். ஆனால், அறிவழகன் அங்கிருந்து சென்னைக்குத் தப்பி வந்துவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீஸார் சென்னை திரும்பினர்.

சென்னையில் அறிவழகன் எங்குத் தங்கியிருக்கிறார் எனத் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ஓட்டேரி பனந்தோப்பு பகுதியில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக இன்று (9.12.2024) காலை 5.45 மணியளவில் துணை ஆணையரின் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீஸார் அங்குச் சென்றனர். அப்போது தன்னை போலீஸார் சுற்றி வளைத்ததை அறிந்த அறிவழகன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுடத் தொடங்கினார். அதனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அறிவழகனைச் சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் அறிவழகனோ, போலீஸாரை நோக்கி மீண்டும் சுட்டார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தற்காப்புக்காக அறிவழகனை நோக்கிச் சுட்டார். இதில் அறிவழகனின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அவரை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிவழகனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
