பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மணிப்பூர் கலவரம் குறித்து பேசும்போது அதற்கான அடிப்படை தகவல்களை தெரிந்து பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தப் பிறகு தான் வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு எதிரான சிறப்பு ஆயுத சட்டங்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளன.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார். ஆனால் அவரின் மாமனார் தான் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக பணியாற்றியவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை. ஆதவ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அதானி விவகாரத்தில் பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு பதிலளிக்காமல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்தது பற்றி ஜாமீனில் வெளி வந்துள்ள அமைச்சர் பேசியுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்த போது அவர் புழல் சிறையில் படித்துக் கொண்டிருந்தார். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடுக்கட்டும்.
அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.” என்றவர் ஒருகட்டத்தில் செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் விமர்சனம் செய்தார். “யோவ் அமலாக்கத்துறை கேசில் உள்ள போன நீ எல்லாம் என் மேல கேஸ் போட்டு, எப்.ஐ.ஆர் வாங்கணும்னு என்னுடைய தலைவிதி. ஒரு வருஷம் ஜெயிலில் கம்பி எண்ணுனவன் நீ. பள்ளிக் கூடமாவது சென்றதுண்டா.
பெயில் ஆனவர், பாஸ் ஆனவரைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். ஜாமீன் அமைச்சருக்கு என் மீது பொறாமை. கேட்ட கேள்விக்கு பதில் வரவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு அதானிக்கு 77 கோடி ரூபாய் திட்டம் கொடுக்கப்பட்டதா இல்லையா. அதை விட்டு சுற்றி வளைக்கின்ற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். நீ சரியான ஆளாக இருந்தா என் மேலே கேஸ் போடு. பார்த்துக்கலாம். உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட் மாட்டேன்.

உங்களை மாதிரியான ஆள்களை ஓட விட வேண்டும் என்பதற்காகத்தான் தவம் எடுத்து அரசியலுக்கு வந்துள்ளேன். திமுக அமைச்சர்களுக்கு ஒன்றே ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். மறுபடியும் நான் ஓராண்டு காலம் பின் செல்ல விரும்பவில்லை. ஆரோக்கியமான அரசியலை செய்யுங்கள். நானும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதற்காக தான் வந்துள்ளேன்.” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
