“என்னால் இந்தியா கூட்டணியை வழி நடத்த முடியும்” – மம்தா பானர்ஜி
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி தொடர்ந்து தலைமை இல்லாமல் செயல்படுகிறது. கூட்டணியின் அமைப்பாளர் என்று யாரையும் நியமிக்காமல் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறி சிலரை நியமித்தனர். அதுவும் இப்போது செயல்படாமல் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் நடவடிக்கைகளுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து மம்தா பானர்ஜி தனியார் செய்தி டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,”இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். அதனை முன்னின்று நடத்துபவர்களால் அதனை நடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்”என்றார்.

நீங்கள் ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடாது என்று கேட்டதற்கு, ”வாய்ப்பு கொடுத்தால் இந்தியா கூட்டணியை சிறப்பாக நடத்துவேன். நான் மேற்கு வங்கத்தைவிட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு என்னால் இந்தியா கூட்டணியை வழி நடத்த முடியும்”என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ்
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குனால் கோஷ் கூறுகையில்,”மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் தலைமையை சுயலாபத்திற்காக கேட்கவில்லை. இது போன்ற பதவிகளை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. பா.ஜ.க விற்கு எதிரான கூட்டணி தேவை என்பதால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினார். டெல்லி தலைமையை மம்தா பானர்ஜி விரும்பவில்லை.
மேற்கு வங்கம் தான் அவரது முழு கவனம். இந்தியா கூட்டணி மம்தா பானர்ஜியின் தலைமையை விரும்பினால் அவர் மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு அந்த பணியை செய்வார்”என்றார்.
சமாஜ்வாடி கட்சி வரவேற்பு
மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி தலைமையை ஏற்க தயார் என்று சொல்லி இருப்பதை சமாஜ்வாடி கட்சி வரவேற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் உதைய்வீர் சிங் இது குறித்து கூறுகையில், ” மம்தா பானர்ஜி மூத்த தலைவர். அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அவரால் இந்தியா கூட்டணியை நடத்தமுடியும். அவரது தலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து முடிவு செய்யவேண்டும். மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணி தலைவராக தேர்ந்தெடுத்தால் எங்களது கட்சி ஆதரவு கொடுக்கும்”என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ்
சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி அளித்திருந்த பேட்டியில், “இந்தியா கூட்டணி தனது ஈகோவை கைவிட்டுவிட்டு மம்தா பானர்ஜியை கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மம்தா பானர்ஜியின் விருப்பம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், ”மம்தா பானர்ஜி எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியின் நோக்கத்தை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்”என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்தேவ்
மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்தேவ் கூறுகையில், ”மம்தா பானர்ஜியின் கருத்து அவரது கருத்து, விருப்பம். மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் உறுப்பினர். எந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா கூட்டணி தலைவர் விவகாரத்தில் ஒரு மித்த கருத்தை எட்டுவது அவசியம். இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க நிதீஷ் குமார் விரும்பினார். தலைமை தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுக்க முடியாது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் கலந்து ஆலோசிக்கவேண்டியது அவசியம். இந்தியா கூட்டணியின் அமைப்பாளர் யார் என்பதை கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து முடிவு செய்வார்கள். தலைவர்கள் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைப்பது இயற்கையான ஒன்றுதான்”என்றார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.பி.தாரிக் அன்வர் இது குறித்து கூறுகையில், “இந்தியா கூட்டணி என்பது பல கட்சிகளை உள்ளடக்கியது. எனவே, தலைமை குறித்து அனைவரும் சேர்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்
சமாஜ்வாடி திடீர் விலகல்
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி கட்சி விலகி இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி நிர்வாகி மிலிந்த் நர்வேகர் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் பாபர் மசூதி இடிப்பு புகைப்படத்துடன் பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் படத்துடன் தனது படத்தையும் வெளியிட்டு, இதைச் செய்தவர்களை (பாபர் மசூதி இடிப்பு) நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மதவாத கட்சியுடன் இருக்கவிரும்பவில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதோடு இந்தியா கூட்டணியின் முடிவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.கள் இரண்டு பேரும் மும்பையில் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.