டெல்லி சலோ: தொடரும் விவசாயிகள் போராட்டம்; நிலவும் பதற்றமான சூழல்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நேற்று முன்தினம் ( நவம்பர் 6) தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருகின்றனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர்.

போலீஸார் அமைத்திருந்த காங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸார் வீசினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் காயமடைந்ததால் பேரணியை சற்று நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளனர்.

இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஷம்பு எல்லையைவிட்டு வெளியே நகர முடியாத வகையில் ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் பெரும் எண்ணிக்கையில் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.