“10 ஆண்டுகளில் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை கூடும்” – ஆய்வறிக்கை சொல்லும் காரணம்!

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பில்லியன் கணக்கில் தன் சொத்து மதிப்பை வைத்திருக்கும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று யூ.பி.எஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாதல், டிஜிட்டல் தொழில்நுட்பம், உற்பத்தி திறன், எனர்ஜி மாற்றத்திற்கான தயார் நிலை ஆகியவை அடுத்து 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் பில்லியன் மதிப்பு சொத்து கொண்ட தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

123 சதவிகிதம் உயர்வு!

2020-ம் ஆண்டு வரை, சீனாவில் நடந்த மாற்றத்தை போன்றதே இதுவும். 2024-ம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னான 10 ஆண்டுகளில் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை விட, தற்போது இரண்டு மடங்கிற்கு மேலே அதிகரித்து உள்ளது. அதாவது, பில்லியர்னர்களின் எண்ணிக்கை 123 சதவிகிதம் உயர்ந்து 185 சதவிகிதமாக உள்ளது. மேலும், அவர்கள் அனைவரின் சொத்து மதிப்பையும் கூட்டினால் 905.6 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வளர்ச்சியில் குடும்பத் தொழிலுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.