கடந்த செவ்வாய் கிழமை இரவு, தொலைக்காட்சி திரையில் தோன்றிய தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் அந்நாட்டு மக்களிடம், ‘ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வருகிறது’ என்று அறிவித்தார்.
இதற்கு காரணமாக, ‘எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் தன் கடமையை ஆற்ற விடாமல் அரசை தடுக்கிறது” என்று கூறினார்.
இந்த அறிவிப்பு தென் கொரியா மக்களை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தனர். இது மிகப்பெரிய பிரச்னையாக மாறி தென் கொரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. மேலும், இயோலின் மீது தேசத் துரோகக் குற்றசாட்டும் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அடுத்த நாளே, இயோல் தன் முடிவில் இருந்து பின்வாங்கி, ராணுவ ஆட்சியை வாபஸ் வாங்கினார்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு, தென் கொரியா நேரப்படி நேற்று, இயோல் மக்களிடம் பேசினார். அப்போது அவர், “ராணுவ ஆட்சி என்ற முடிவு நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற என் நிலைபாட்டில் இருந்து தான் உதித்தது. இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த குடிமக்களுக்கு எனது உண்மையான மன்னிப்புகள். எனது ஆட்சி காலம் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலையை சரி செய்வதற்கான வழிமுறைகளை என் கட்சியிடம் விட்டுவிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.