`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து நேற்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றி உரையில்,“ மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதி பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் எனும் எகத்தாள ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வருகின்ற உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.” எனக் காட்டமாகப் பேசினார்.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை `மனிதநேய உதயநாள்’ விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் தெற்கு பகுதி இளைஞரணி சார்பில் ஓட்டேரி எஸ்.ஆர்.பேலஸில் நடைபெற்றது. இந்த விழாவில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு , 10 கருணை இல்லங்களை தேர்வு செய்து, அவர்களின் தேவைகளை அறிந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் சீர்நலத் திட்டங்களால் கருவறை முதல் கல்லறை வரை இருக்கும் அனைத்து தரப்பு மக்களும், தமிழ்நாடும் சுபிட்சமாக இருக்கிறது. 3 தினங்களுக்கு முன்பு முதல்வர் கொளத்தூர் வருகை தந்தபோது, அவர் மக்களின் பாராட்டு மழையில்தான் நனைந்து சென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி என்ற நம்பிக்கை வீணாகும் எனச் சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்துக்கே வராதவர்கள் பேசுகிறார்கள்.

எங்கள் நிலைபாடு 200 அல்ல, 234-கையும் திராவிட மாடல் கைப்பற்றும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக, எப்போதெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், கழகத் தொண்டன் 100 கி.மீ வேகத்தில் பயணிப்பான். மீண்டும் 2026-ல் முதல்வர் ஸ்டாலினை அரியணை ஏற்றும்வரை எங்கள் வேகம் குறையாது” எனப் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
