மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியில் வந்து பா.ஜ.க அமைச்சரவையில் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். சமீபத்தில், நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தங்களது ஆதரவை அஜித்பவார் தெரிவித்தார். அதன்படி அரசு கடந்த 5-ம் தேதி பதவியேற்ற போது அஜித்பவாரும் துணை முதல்வராக பதவியேற்றார். அஜித்பவார் கடந்த 2021-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் துணைமுதல்வராக இருந்தார்.

அப்போது அஜித்பவாருக்கு பினாமி பெயரில் சொத்து இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு அஜித்பவார் மற்றும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் அஜித்பவாரின் சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள வீடு, கோவாவில் உள்ள ரிசார்ட் என 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயத்தில் அஜித்பவார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் அஜித்பவாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தது. பினாமி சொத்துகளை வாங்க அஜித்பவார் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாயம் தெரிவித்தது. சொத்துகள் சட்டப்படி பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும், பினாமி சொத்திற்கும், அஜித்பவார் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க வருமான வரித்துறை தவறிவிட்டதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அஜித்பவாருக்காக தீர்ப்பாயத்தில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் இது குறித்து கூறுகையில், அஜித்பவார் குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை. சொத்துகள் சட்டப்படிதான் வாங்கப்பட்டு இருக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து வருமான வரித்துறை பறிமுதல் சொத்துக்களை அஜித்பவாரிடமே மீண்டும் கொடுத்துவிட்டது. ஏற்கெனவே, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் அஜித்பவார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து, அஜித்பவாரை அமலாக்கப்பிரிவு விடுவித்தது.
இந்நிலையில், “வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையில் இருந்து தப்பவே பா.ஜ.க கூட்டணிக்கு அஜித்பவார் சென்றுள்ளார்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.