“அவர் மீது பொய்ப்புகார்..” – போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம்!

பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பள்ளி மாணவி கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட, இன்னொருபுறம் அவருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி அதே பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவியிடம் தினம்தோறும் பயமுறுத்தி ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து வந்ததாக, சம்பந்தப்பட்ட மாணவி மதுரை கலெக்டரிடம் விரிவான புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மாவட்ட சமூக நலத்த்துறை, கல்வித்துறை, குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி ஆசிரியர் மூர்த்தியை இடைநீக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

போக்சோ வழக்கு

அதே நேரம், ஆசிரியர் மூர்த்தி மிகவும் நல்லவர், அவரால் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்கள். அவர் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, புகாரை நன்கு விசாரிக்க வேண்டும் என்று அதே பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.