Bitcoin: `1 லட்சம் டாலர்’ உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு… இதில் டிரம்புக்கு என்ன சம்பந்தம்?!

கிரிப்டோ கரன்சி வரலாற்றிலேயே முதன்முறையாக நேற்று பிட்காயினின் மதிப்பு ஒரு லட்சம் டாலரை தாண்டி உள்ளது. இந்த உயர்வுக்கு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் தான் முக்கிய காரணம்.

ஆரம்பத்தில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக இருந்த டிரம்ப், நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார். மேலும், அமெரிக்காவை ‘கிரிப்டோ கரன்சியின் தலைநகரமாக’ மாற்றப்போவதாக வாக்குறுதியும் கொடுத்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்…

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நம் நாட்டின் செபி அமைப்பை போன்ற அமெரிக்காவின் செக்யூரிட்டி அன்ட் எக்சேஞ்ச் கமிஷனிற்கு தலைவராக பால் ஆட்கின் என்பவரை நியமித்திருக்கிறார். இவர் பிட் காயின் ஆதரவாளர் ஆவார்.

இதனால் தான், நேற்று பிட்காயினின் மதிப்பு 103,800 டாலரை தொட்டது. பிட்காயின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய உச்சமாகும். டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதில் இருந்து பிட்காயினின் மதிப்பு 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

“இந்த ஆண்டில் பிட்காயின் துறையில் பல மாற்றங்கள் நடந்ததால், இந்த ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 150 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள், பிட் காயின் மதிப்பு 1,20,000 டாலரை தொடும், 2025-ல் 1,50,000 டாலரை தாண்டும்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.