நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், “தவறாக இந்தி பேசுகிறார்” என குரல் எழுப்பினர். அதற்கு நிர்மலா, “நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். அங்கே இந்தி படிப்பதே பெரிய பிரச்னை. நான் சின்ன வயதில் இந்தி படித்தப்போது கிண்டல் செய்யப்பட்டேன். அதனால், என்னுடைய இந்தியை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். உங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் நண்பர்களின் இந்தி விரோதத்தை பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள். ‘நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல… இந்தி திணிப்பிற்கு தான்’ என்று அவர்கள் கூறுவதை வரவேற்கிறேன். யாரும் யார் மேலேயும் எதுவும் திணிக்கக்கூடாது. அதனால் தான், பிரதமர் ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் மாநில மொழியை பின்பற்ற ஊக்கமளிக்கிறார்.

நான் சின்ன வயதில் இந்தி கற்க சென்றப்போது, “தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டின் உப்பை தின்றுவிட்டு வட நாட்டு மொழியான இந்தியை படிக்க போகிறாயா?” என்று கேள்விகளால் பலமுறை அவமானப்பபட்டேன். இந்த நிலை அங்குள்ள அரசியல் பின்புலத்தால் தான். தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் வந்தேரி மொழிகளாக கருதப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. அப்போது நான் இந்தி படிப்பதில் என்ன தவறு? இப்படி அவர்கள் கூறுவது திணிப்பு இல்லையா?. இந்தி படிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.என் பல பேச்சுகளில் புறநானுறு, திருக்குறள் ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறேன்.
அந்தளவுக்கு எனக்கு தமிழ் மீது பற்று இருக்கிறது. எனக்கு மற்ற மொழிகளை விட, தமிழ் மீது அதிக பற்று உள்ளது. சென்னையில் இந்தி பிரசார சபா எரிக்கப்பட்டது. யார் அதை எரித்தது? நீங்கள் எனக்கு பிடித்த மொழியை படிப்பதற்கான அடிப்படை உரிமையை பறித்தீர்கள். அதுவும் திணிப்பு தானே. பிரதமர் மோடி ஐ.நா சபையில் தமிழை மேற்கோள் காட்டினார். அந்தளவுக்கு பிரதமருக்கு தமிழ் மீது மரியாதை உண்டு. தி.மு.க கூட்டணியில் இருக்கும் எந்த பிரதமர் தமிழை மேற்கோள் காட்டினார்கள் என்பதை கூறுங்கள்” என்றார்.

இதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி, “இந்தி மொழி திணிக்கப்படுவதையே நாங்கள் விரும்பவில்லை. மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாவில் மாணவர்கள் தமிழ் படிக்க முடியாது” என்றார். இதேபோல் திருச்சி சிவா, “யாரும் இந்தியை படிக்கக்கூடாது என தி.மு.க குறுக்கே நிற்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள தி.மு.க தடையாக இருந்ததில்லை. ஒரு மொழி மற்ற மொழி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்தபோதிலிருந்தே இந்தி என்பது இந்தி பேசாத மக்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது.
மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். ஆனால் இப்போது பா.ஜ.க இந்தியை எங்கு பார்த்தாலும் திணிக்கிறது. எனவேதான் தி.மு.க எதிர்க்கிறது. இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலங்களிலும் எதிர்த்துக் கொண்டேதான் இருப்போம். இந்தி மொழியை கற்று தரும் இந்தி பிரச்சார சபா தலைமையிடம் சென்னையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு லட்சக்கணக்கானவர்கள் படித்து பட்டம் பெறுகின்றனர். அதற்கு தி.மு.க குறுக்கே நிற்கவில்லை. அப்படி நின்றிருந்தால் அங்கு அந்த சபா இருந்திருக்காது” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “முதலில் நாடாளுமன்றத்தில் என்ன பேசவேண்டும் என இருக்கிறது. தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போதோ இந்தி படிக்க போனேன் கேலி செய்தார்கள் என பேசுகிறார். நிர்மலா சீதாராமனுக்கு படிக்கும் ஆர்வமும், வேகமும் இருந்திருந்தால் கற்றுக்கொண்டிருப்பார். தவறாக பேசியதை ஒருவர் கண்டுபிடித்து சொன்னால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கேலி செய்தார்கள் என கூறுவது எப்படி சரியாக இருக்கும். முதலில் அந்த ஒப்பீடு தவறானது.
இன்று தமிழகத்தில் ஓட்டல், ஜவுளிக்கடை, மெக்கானிக் ஷாப்பில், சலூனில் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து பலர் வேலை செய்கிறார்கள். அவர்கள் தமிழ் சரளமாக பேசுகிறார்கள். தி.நகரில் பிரபலமான ஜவுளிக்கடைக்கு சென்றேன். அங்கு பட்டு துணிகள் விற்பனை செய்யும் பிரிவில் தமிழில் பேசி துணிகளை வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதற்கு தமிழ் மீதான பிடித்தம் அல்லது நிர்பந்தம்தான் காரணம். ஆனால் இந்தி படிக்க விடாமல் மிரட்டினார்கள். கேலி செய்தார்கள் என சொல்வதற்கு நிர்மலா சீதாராமன் அரசியல்வாதியாக இல்லை, சாமானிய மனிதனாக கூட வெட்கப்பட வேண்டும்” என்றார்.