Namibia : நமீபியாவின் முதல் பெண் அதிபரானார் நெடும்போ – தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!

நமீபியாவில் 72 வயதான நெடும்போ நந்தி-ன்டைத்வா முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு தேர்தல் ஆணையம் நெடும்போ நந்தி-ன்டைத்வா 57% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பந்துலேனி இதுலா 26% வாக்குகள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆளும் சுவாபோ (SWAPO) கட்சி ஆட்சியில் அமரும். பந்து லெனி இதுலாவின் ஐபிசி (ipc) கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது. சுவாபோ கட்சி 96 இடங்களில் 51 இடங்களையும், ஐபிசி கட்சி 20 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. ஆளும் SWAPO கட்சி 1990 -ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து 34 ஆண்டுகள் ஆட்சியில் உள்ளது‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தேர்தலிலும் தேர்தலில் முடிவுகளிலும் பல குளறுபடிகள் செய்திருப்பதாகவும் நேர்மையான முறையில் தேர்தல் நடக்கவில்லை எனவும் முடிவுகளில் நம்பிக்கை இன்மை உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது ஒரு நிர்வாக சீர்குலைவு என்று குறிப்பிடுகின்றனர். பல வாக்காள மையங்களில் போதிய அளவிலான வாக்குச்சீட்டு இல்லை என்றும் ஸ்கேனர்கள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் நமீபியாவில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

நமீபியா தேர்தல் ஆணைய தலைவர் எல்சி ங்கிகெம்புவா வாக்குகளை ஒழுங்கமைப்பதில் தோல்வி மற்றும் வாக்குச்சீட்டு பற்றாக்குறையை ஒப்புக்கொண்டார். ஆனால் மோசடி குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறார். “ஒற்றுமை, பன்முகத்தன்மை, புரிதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் உணர்வோடு முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து நமீபியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நெடும்போ நந்தி-ன்டைத்வா நமீபிய தேசத்து மக்கள் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் இவர் துணை அதிபர் பொறுப்பு வகித்தார். 25 ஆண்டுகளுக்கு மேல் அந்நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் இவர் மக்களின் நம்பிக்கை பெற்றவராக திகழ்கிறார். தேர்தல் முடிவுகள் குறித்து வாழ்த்து தெரிவித்த தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா “குடியரசின் ஐந்தாவது அதிபராகவும், எங்கள் பிராந்தியத்தில் முதல் பெண் அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகம் மற்றும் நமது சமூகங்களை மாற்றியமைக்கும் திறனுக்கு ஒரு சான்றாகும்” என புகழாரம் சூட்டியுள்ளார். அண்டை நாடுகள் இந்த முடிவுகளையும் எதிர்க்கட்சியின் போராட்டத்தையும் உற்று நோக்கி வருகின்றனர்.