தாம்பரம்: வயிற்றுப்போக்கு, வாந்தி; 3 பேர் பலி… காரணம் என்ன? – அமைச்சர் விளக்கம்

சென்னை தாம்பரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் திருவேதி (56), வரலட்சுமி (88), மோகனரங்கன் (42) ஆகிய 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் அந்தப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்கிறார். கழிவு நீர் கலந்த குடிநீரால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மா.சுப்ரமணியன்

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “பல்லவபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காமராஜர் நகர், பல்லாவரம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைமேடு ஆகிய பகுதிகளில், கடந்த சில தினங்களாக அந்தப் பகுதி மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக 33 பேர் கடந்த இரண்டு தினங்களாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்துச் சென்றிருக்கிறார்கள். இதில், 14 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்.

19 பேர் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு போன்ற ஒரே மாதிரியான உபாதைதான் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக செய்தியறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர், மேயர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளனர். இதில், மாங்காடு பகுதியைச் சேர்ந்த திருவேதி (56) என்பவரும், மோகனரங்கன் (42) என்பவரும் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

மா.சுப்ரமணியன்

இந்த பாதிப்புகளுக்கு என்னக் காரணம் என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மலைமேடு பகுதியிலிருந்துதான் மற்றப் பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. எனவே, அந்தக் குடிநீரை கிம்ஸ் இன்ஸ்டிடியூட்க்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவு சில தினங்களில் கிடைக்கும். ஆய்வு முடிவுக்குப் பிறகே, உண்மையான காரணம் குறித்து அறிய முடியும். அதற்குள் இந்த சூழலை எதிர்க்கொள்ள, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மருத்துவ முகாம்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வரலட்சுமி (88) என்பவரும் இறந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தற்போதைக்கு பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எந்த விஷயத்தை எடுத்தாலும் பதற்றச்சூழலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.