தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 4) புகார் மனு ஒன்றை அளித்த பரபரப்பு புகார் அளித்தார். அந்தப் புகார் மனுவில், “தென்காசி மாவட்டம் ஊத்துமலை கிராமத்தில் எனது மனைவி கோமதி அம்மாள் பெயரில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குப் பட்டா பெறுவதற்கு ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தேன். அந்த மனு மீதான விசாரணை, தென்காசி வருவாய்க் கோட்டாட்சியர் லாவண்யா வசம் விசாரணையில் உள்ளது.

நில புல பட்டாவில் எனது மனைவி பெயரைச் சேர்ப்பதற்குத் தேவையான எல்லா ஆவணங்களையும் சமர்பித்துவிட்டேன். ஆனால், எனது மனுவைப் பரிசீலனை செய்து பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர் லஞ்சம் கேட்கிறார். வருவாய்க் கோட்டாட்சியரின் இந்தச் செயல், தண்டனைக்குரியது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அரசுப் பணி செய்ய லஞ்சம் கேட்டது தொடர்பாகத் தென்காசி வருவாய்க் கோட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரவிருக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்ட நாள் அன்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் குறித்த தகவல்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்படும்” என விவசாயி கண்ணையா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

புகார் குறித்து விளக்கம் பெறத் தென்காசி வருவாய்க் கோட்டாட்சியர் லாவண்யாவை தொடர்பு கொண்டோம். அப்போது நம்மிடம் பேசியவர், “விவசாயி கண்ணையா கூறியது போலப் புகாரில் சொல்லப்பட்டது எதுவும் உண்மை அல்ல. புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்தும் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள். சட்டவிதிகளுக்கு உட்பட்டு மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிறைவாகச் செய்து வருகிறேன். அந்த வகையில் விவசாயி கண்ணையாவின் கோரிக்கை மனுவையும் பரிசீலித்தோம்.

பட்டாவில், அவரின் மனைவி பெயர் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது அவர் பட்டா கோரும் நிலத்தின் மீது உரிமையியல் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே பட்டாக்கோரும் நிலத்தின் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஒருதலைபட்சமாக பட்டா வழங்க முடியாது என உரிய விளக்கத்துடன் அவருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் அவர் அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, பட்டா பெற முயன்று வருகிறார். என் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளித்துள்ளேன். அதேசமயம், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்த விவசாயி கண்ணையா மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்” எனக் கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
