அம்பேத்கரை அறிவோம்: `அம்பேத்கர் என்னும் புரட்சிகர பெண்ணியலாளர்’

இந்திய அரசியலமைப்பில் அவர் செய்த பங்களிப்புகளுக்காகவும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்திற்காகவும் அதிகம் அறியப்பட்டிருந்தாலும், பெண்ணிய இயக்கத்தில் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் பற்றி பேசாமல் கடந்துவிட முடியாது. 

பெண் விடுதலை குறித்த அண்ணலின் பார்வை, சாதிய அமைப்பு மற்றும் பெண்கள், விளிம்புநிலை சமூகங்கள் மீதான அதன் ஒடுக்குமுறை ஏற்படுத்திய விளைவுகள் போன்றவற்றின் மீதான அவரது விமர்சனத்துடன் சேர்த்துப் பார்ப்பதுதான் கூடுதல் பொருத்தமாக இருக்கும். பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை சாதி மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரையில் அம்பேத்கரின் கருத்துகள் புரட்சிகரமானவை.

சாதிய படிநிலைக்குள் பெண்களை அடிபணிய வைக்கும் சமூக கட்டமைப்புகளின் அடித்தளங்களை அவை அசைத்துப் பார்த்தன. அகமண முறையின் மூலம் சாதி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். ஒருவரின் சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறைக்கு பெண்களின் பாலியல் பண்பின் மீது கடுமையான கட்டுப்பாடு தேவைப்படுகிறது. திருமணத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சாதி கட்டமைப்புகள் தங்கள் தூய்மையைப் பராமரித்துக் கொள்கின்றன. 

அம்பேத்கர்

உடன்கட்டை ஏறுதல், கட்டாய கைம்பெண் முறை, குழந்தை திருமணங்கள் மற்றும் பிரம்மச்சரியம் போன்ற நடைமுறைகள் இந்த இறுக்கமான அமைப்புகளுக்குள் பெண்களின் பங்கைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக இருந்தன. சாதி மறுப்பு திருமணங்கள், குறிப்பாக பிரதிலோமா (ஒரு ஆதிக்க சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை திருமணம் செய்து கொள்வது) சாதி வரையறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாலேயே கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதாக அம்பேத்கர் சொல்கிறார். மனுஸ்மிருதி இந்த நடைமுறைகளை நிறுவனமயமாக்கியது; சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறை இரண்டையும் வலுப்படுத்தியது. சாதிய படிநிலையில் அவர்களின் நிலையின் அடிப்படையில் சாதிய சுரண்டல் பெண்களை எவ்வாறு வேறு வேறு வகைகளில் பாதிக்கிறது என்பதை அம்பேத்கர் கூர்மையாக அவதானித்தார்.

சாதிய அமைப்பின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் பெண்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடோடு பாலின அடிப்படையிலான வன்முறையையும் சேர்த்து அனுபவிக்கும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்கள். பாலியல் வன்முறை, பொருளாதார சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அடிப்படை கண்ணியம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தாங்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதை உணரவும் சாதி ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவத்திற்கான பரந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கவும் தலித் பெண்கள் முன்வர வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

பார்ப்பன மரபுகள் எப்படி பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதை அம்பேத்கர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். `இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்கிற அவரது நூலில் எப்படி பார்ப்பனிய நூல்களும் பழக்கவழக்கங்களும் பாலின பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன என்பதை அவர் முன்வைத்தார். இத்தகைய பாகுபாட்டை நிராகரிக்கும் பௌத்த மரபுகளுடன் இதை அவர் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டினார்.

அம்பேத்கர்

சங்கத்தில் (பௌத்த துறவற சமூகம்) பெண்களை ஏற்றுக்கொள்வது, பெண்களுக்கான கல்வி மற்றும் ஆன்மீக நடைமுறைகளுக்கான அணுகல் உள்ளிட்ட சமத்துவத்தை ஊக்குவிக்கும் பௌத்த படிப்பினைகளை அம்பேத்கர் முன்னிறுத்தினார். பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்புகள் கோட்பாட்டுரீதியிலான பகுப்பாய்வுகளோடு நின்றுவிடவில்லை; இந்திய சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்த அவர் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தார். 

இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்ற முறையில், பாலின சமத்துவம் இடம் பெறுவதையும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் நடைமுறைகளை நிராகரிப்பதையும் அவர் உறுதி செய்தார். அம்பேத்கரின் மிக முக்கியமான சட்டரீதியிலான முயற்சிகளில் ஒன்று, இந்து கோட் பில் (Hindu Code Bill) மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்து தனிநபர் சட்டங்களை சீர்திருத்த முயன்ற இந்த மசோதா திருமணம், வாரிசு மற்றும் விவாகரத்து ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை வழங்க முன்மொழிந்தது. இந்த மசோதா முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், இது ஆணாதிக்க சட்ட கட்டமைப்புகளை அகற்றுவதற்கான ஒரு மைல்கல் முயற்சி. 

அம்பேத்கர்

 இந்து கோட் பில் மசோதா என்பது இந்து தனிநபர் சட்டங்களில் பொதிந்துள்ள ஆணாதிக்கத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சீர்திருத்தம். மகள்களுக்கு சம சொத்துரிமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருதார மணம், பெண்கள் விவாகரத்து கோருவதற்கான உரிமை ஆகியவை அம்பேத்கரின் பார்வை. இந்த மசோதா கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு இறுதியில் தாமதமானாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தது பாலின நீதிக்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 

அவரது முயற்சிகள் பெண் விடுதலைக்கான ஒரு பரந்த பார்வையை பிரதிபலித்தன. அது சட்ட சீர்திருத்தத்துடன் நிற்காமல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையையும், சாதியையும் ஒழிப்பதில் முன்னின்றது. அம்பேத்கரின் பெண்ணியம் குறுக்குவெட்டுத் தன்மை கொண்டது என்பது இயல்பான ஒன்றே. அவரது சமகாலத்தின் பல மையநீரோட்ட பெண்ணியவாதிகளைப் போலல்லாமல், சாதி மற்றும் ஆணாதிக்கம் என்ற இரட்டை ஒடுக்குமுறையை எதிர்கொண்ட தலித் பெண்களின் தனித்துவமான போராட்டங்களில் அவர் கூடுதலாக கவனம் செலுத்தினார். கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தலித் பெண்கள் அணிதிரண்டு தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு அவர் ஊக்குவித்தார். 

தலித் பெண்களுக்கான அம்பேத்கரின் அறைகூவல் என்பது, வெறுமனே அமைதியான பங்கேற்புக்கானது மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் செயலூக்கமான தலைமைத்துவத்திற்காகவும் இருந்தது. பெண் விடுதலை குறித்த அம்பேத்கரின் சிந்தனைகள் சாதி, பாலினம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலியுறுத்தி காட்டுகின்றன. உண்மையான பாலின சமத்துவத்தை அடைவதற்கு சாதி அமைப்பை அகற்றுவது முக்கியமானது என்பது அண்ணலின் வாதம். சாதி ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள் பிரிக்க முடியாதவை என்பதை அங்கீகரிப்பதில் அவரது பெண்ணியப் பார்வை தீவிரமானது. 

அம்பேத்கர் சிலை

தலித் பெண்ணிய இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்த அம்பேத்கரின் பணி, சாதி மற்றும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை இரண்டையும் தொடர்ந்து வலிமையுடன் எதிர்கொள்கிறது. அம்பேத்கரின் கருத்துக்கள் இந்தியாவில் பல தளங்களில் ஏற்படுத்தியது போலவெ சமகால பெண்ணிய உரையாடலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சாதி மற்றும் பாலினத்தின் குறுக்குவெட்டுத்தன்மை மீதான அவரது கவனம் நவீன தலித் பெண்ணியத்திற்கான அறிவார்ந்த அடித்தளத்தை வழங்கியிருக்கிறது.

சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தில் தலித் பெண்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் விடுத்த அழைப்பு சாதி மற்றும் பாலின விடுதலைக்கான இயக்கங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு குரல்.பெண் விடுதலை குறித்த  அம்பேத்கரின் கருத்துகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பை முன்வைக்கின்றன. அது அவரது காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் பொருத்தமாக உள்ளது. சொல்லப் போனால் இன்னும் கூடுதல் பொருத்தத்துடன் இருக்கிறது.

சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறைக்கு இடையிலான தொடர்பு குறித்த அவரது ஆய்வு இந்தியாவில் பெண்ணிய கருத்தியலின் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. அம்பேத்கர் பெண்களை அடிமைப்படுத்திய சமூகக் கட்டமைப்புகளை எதிர்த்தது மட்டுமல்லாமல், சமத்துவம், கல்வி மற்றும் சாதி ஒழிப்பு ஆகியவற்றில் வேரூன்றிய அவர்களின் விடுதலைக்கான ஒரு வரைபடத்தையும் வழங்கினார். ஒரு பெண்ணியவாதியாக அவரது அடையாளம், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அவரது அர்ப்பணிப்புக்கு மேலும் ஒரு சான்று.

அம்பேத்கர் என்னும் பெண்ணியவாதியை கொண்டாட வேண்டியதும் உதாரணமாக முன்னிறுத்தி பின்தொடர வேண்டியதும் இந்திய பெண்ணிய கருத்தியலின் கடமை.எனில், அனைத்து நிலைகளிலும் சமத்துவத்தை வலியுறுத்திய அரிதான, அனைவருக்குமான தலைவர் அவர்.

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’