பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 – 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. அப்போது சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகப் பதவி வகித்தார். அந்த நேரத்தில், குர்மீத் ராம் ரஹீம் என்ற சாமியார், சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசினார். அது தொடர்பாக நடந்த சலசலப்புக்கு மத்தியில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
அதேநேரம், சீக்கிய மதம் குறித்து தவறாகப் பேசியவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது, அப்போது ஆட்சியில் இருந்த சீக்கியத் தலைவர்களுக்கு எதிராகத் திரும்பியது. அது தொடர்பாக சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட சிரோமணி அகாலி தள அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்தியது. அதில், அதிகாரத்தில் இருந்தவர்கள் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் அகாலி தக்த்-தில் தங்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்டிருந்தனர். இந்த நிலையில், சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்களுக்கு மதரீதியாக தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில், சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுத்தம் செய்வது, வாசலில் காவல் நிற்பது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், ‘என் தவறுக்கு வருந்துகிறேன்’ என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு, பொற்கோயிலின் வாசலில், சக்கர நாற்காலியில் காவலில் இருந்தார் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல்.
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple premises in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, are offering ‘seva’ under the religious punishments pronounced for them by Sri Akal Takht Sahib, on 2nd December.
Details awaited. pic.twitter.com/CFQaoiqLkx
— ANI (@ANI) December 4, 2024
இந்த நிலையில், இன்று காலை, 9 மணியளவில், சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு முயற்சியைப் பார்த்து, சுதாரித்துக்கொண்டதால், சுக்பீர் சிங் பாதல் உயிர் தப்பித்தது. உடனே அங்கிருந்தவர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியவரைப் பிடித்து தாக்கியிருக்கின்றனர்.
குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேன் சிங் என்பவர்தான் இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “ “நரேன் சிங்கிற்கு குற்றப் பின்னணி இருக்கிறது. அவருக்கு எதிராக நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும். மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.