மகாராஷ்டிரா: `யார் முதல்வர்?’ – மஹாயுதி கூட்டணியில் உச்சகட்ட ஆலோசனை!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிந்து 10 நாள்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் பதவி பா.ஜ.க-விற்கு என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதர அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் சிவசேனா மற்றும் பா.ஜ.க இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயுடன் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க திட்டமிட்டது. ஆனால் அதற்குள் ஏக்நாத் ஷிண்டே சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது மும்பை திரும்பி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே உடல்நிலை சரியாகாத காரணத்தால் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

பட்னாவிஸ்

நேற்று ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் அதிகார பகிர்வு குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன் நேற்று மாலை ஏக்நாத் ஷிண்டேயை தானேயில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கிரீஷ் மகாஜன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன் என்றும், அரசியல் குறித்து பேசவில்லை என்றும், அவரை சந்தித்து பேச கடந்த சில நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு இருந்தேன் என்று தெரிவித்தார். ஆனாலும் இருவரும் அமைச்சரவை பதவியேற்பு குறித்து பேசியதாக தெரிகிறது.

இன்று ஏக்நாத் ஷிண்டே உடல் நிலை சரியாகிவிட்டால் மூன்று கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது முடியாத பட்சத்தில் அமைச்சரவை பதவியேற்ற பிறகு இலாகா குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். சிவசேனா எம்.எல்.ஏ தீபக் கேசர்கர் இது குறித்து பேசுகையில், அமைச்சரவை பதவியேற்பு குறித்து எங்களுக்கு சொல்லவே இல்லை. எங்களிடம் சொன்னால் நாங்களும் செல்வோம். அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு பா.ஜ.கவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

சிவசேனாவின் மற்றொரு எம்.எல்.ஏ பரத் கோகாவாலா இது குறித்து கூறுகையில், ”ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக விரும்பவில்லை. நாங்கள்தான் அமைச்சரவையில் சேரும்படி அவரை நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார். வரும் 5ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்க இருக்கிறது. இதையடுத்து பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் புதிய முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பெயர் அடிபடுகிறது. அதோடு வேறு சிலரது பெயர்களும் இப்பதவிக்கு அடிபடுவதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும் இப்பதவி தொடர்பாக தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதே போன்று அமைச்சரவை பதவியேற்பில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே உள்துறை உட்பட சில முக்கிய இலாகாக்களை கேட்டு அடம்பிடிப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.