“3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” – மோகன் பகவத் அறிவுரையும்… எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும்!

மக்கள்தொகையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 1.4 பில்லியனுடன் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வப்போது மக்கள் தொகை குறித்த பேச்சுக்கள் எழும்போதெல்லாம், முஸ்லிம்கள்தான் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி கூட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ராஜஸ்தானில், “உங்களின் சொத்துகளைக் காங்கிரஸ் பறித்து, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுக்கும். இந்த எண்ணம் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது.” என அப்பட்டமாகப் பிரசாரம் செய்தார்.

மக்கள்தொகை

அப்போது, இந்த அப்பட்டமான பொய் பிரசாரத்துக்கு மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், எல்லோரும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருப்பது விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “குழந்தை பிறப்பு விகிதம் 2.1 சதவீதத்திற்கும் கீழ் சென்றால் சமுதாயம் அழிந்துவிடும். எனவே சமுதாயமும், இந்திய கலாசாரமும் நிலைத்திருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்திலும் 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்த நிலையில் மோகன் பகவத்தின் இத்தகையப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். அதில், தேசியவாத கட்சியைச் (சரத் பவார்) சேர்ந்த ஜிதேந்திர அவ்ஹாத், “உங்களுக்கென்ன நீங்கள் (மோகன் பகவத்) என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அந்தக் குழந்தைகளுக்கு யார் உணவளிப்பது? அவர்களை யார் படிக்கவைப்பது, கவனிப்பது? நம்மிடம் அவ்வளவு வளங்கள் இருக்கிறதா… இந்திய அவ்வளவு பெரிய பணக்கார நாடா?

ஜிதேந்திர அவ்ஹாத்

உலகிலுள்ள அனைவரையும் விட, பொருளாதாரத்தை அதிகம் புரிந்துகொள்வது வீட்டில் உள்ள பெண்களே. பணவீக்கம் அதிகரிக்கும்போது, ​​பள்ளிக் கட்டணமும் உயரும், அதனால் குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது பெண்களுக்கு நன்றாகத் தெரியும். சில விஷயங்களை, மக்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு விட்டுவிடுங்கள். எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்த வேண்டாம். கணவன் – மனைவி அதை முடிவு செய்யட்டும்.” என்றார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் சஞ்சய் ராவத், “முதலில் உங்கள் அறிவுரையை பா.ஜ.க-வினருக்கு வழங்குங்கள். உங்களின் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸோ குழந்தை பிறப்புகளை அதிகரிக்கச் சொல்கிறது. இது முற்றிலும் பாசாங்குத்தனமான கொள்கை. பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஏன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசவில்லை.” என்று விமர்சித்தார்.

ஒவைசி

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனின் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, “மோகன் பகவத்திடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அவர் என்ன கொடுப்பார். அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 1,500 செலுத்துவாரா? இதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவாரா?” எனக் கேள்வியெழுப்பினார்.

காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி, “மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால், பள்ளிக் கட்டணம், கல்விச் செலவுகள் போன்றவற்றை அரசு குறைக்க வேண்டும். இங்கு வேலைவாய்ப்பின்மை நிலவும்போது, எதற்காக மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் சொல்ல வேண்டும்.” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MaperumSabaithanil