Annamalai: “இதற்காகத்தான் லண்டன் சென்றேன்..” – விஜய், சீமான், பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பளீர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டனில் மூன்று மாதங்கள் தனது படிப்பை முடித்துவிட்டு இன்று (டிசம்பர் 1) சென்னை திரும்பியுள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அரசியல் பயிற்சி வகுப்பாக நடத்தக்கூடிய ‘Chevening Gurukul’ என்ற மூன்று மாத பயிற்சிப் படிப்பைப் படிக்கச் சென்றிருந்தார் அண்ணாமலை. நேற்றே சென்னை திரும்ப வேண்டிய அண்ணாமலை புயல் பாதிப்புக் காரணமாக விமானச் சேவை தாமதமாக, இன்று சென்னை திரும்பியுள்ளார். நாளை அண்ணாமலைக்குச் சென்னை கமலாலயத்தில் ‘பா.ஜ.க’ வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றனர்.

Chevening Gurukul

இந்நிலையில் சென்னை திரும்பிய அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் லண்டன் சென்றது குறித்தும் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் அண்ணாமலை, “லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘Chevening Gurukul’ பயிற்சி வகுப்பை மூன்று மாதங்கள் முடித்துவிட்டு, அரசியல் அறிஞர்களிடம் பாடம் கற்றுவிட்டு வந்திருக்கிறேன். இனி அரசியல் வேலைகளில் தீவிரமாக இறங்குவேன்.

விஜய் சினிமாவில் வெற்றி பெற்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு நல்ல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை கட்சியின் முதல் மாநாட்டிற்கு மட்டும்தான் களத்திற்கு வந்திருக்கிறார் விஜய். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார்?  

விஜய்

திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். இப்போது திராவிட கட்சிகளின் வாக்கு வங்கி மூன்றாகப் பிரிந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன். ‘தி.மு.க’ வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் விஜய். ‘பா.ஜ.க’வையும் கொள்கை ரீதியாக விமர்சித்திருக்கிறார். அரசியலில் விமர்சனங்கள் வருவதெல்லாம் சாதாரண விஷயம்தான். விஜய்க்குப் பதில் சொல்லவும், கேள்வி கேட்கவும் பா.ஜ.க தயங்காது. புதிதாக யார் வந்தாலும் வரவேற்கிறோம். எங்களுக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை.” என்றார்.

சீமான் குறித்துப் பேசியவர், “அண்ணன் சீமான், ரஜினியைச் சந்தித்திருக்கிறார். அதனால் பா.ஜ.க அவருடன் கூட்டணி அமைக்கும் என்றெல்லாம் கணக்குப் போடத் தேவையில்லை. சீமான் புதுப்பாதையில் பயணிக்கத் திட்டமிட்டிருக்கிறார். சீமான் பாதை வேறு. பா.ஜ.க பாதை வேறு.

சீமான் – ரஜினி

புதிதாக விஜய் வந்திருக்கிறார். சீமான் புதுப்பாதையில் பயணிக்கவிருக்கிறார். இரண்டு திராவிட கட்சிகளும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் பல்வேறு திட்டங்களை வகுக்கின்றன. பா.ம.க எங்களுடன் கைகோர்த்து நிற்கிறது. பல முனையில் போட்டிகள் நிலவுகின்றன. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக அமையும்” என்று பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai