கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் செய்வதல்ல.

அனைத்து சமூகத்தினரும் செய்கின்றனர். முதலமைச்சர் உண்மைக்கு பொருத்தம் இல்லாத தகவலை தெரிவித்துள்ளார். சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சமூகநீதி பாதிக்கப்படும் என்ற பொய்யைக் கூறி லட்சக்கணக்கான கைவினை கலைஞர்களின் வாழ்வை ஸ்டாலின் முடக்கப் பார்க்கிறார். கேரளா மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில்கூட விஸ்வகர்மா திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை திமுக செய்கிறது. சமூகநீதி பேசும் நீங்கள், உங்கள் மகனுக்கு மட்டும் ஏன் துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியிருக்கலாமே!
சமூகநீதிக்கு எதிராக ஒரு கட்சி இருக்கும் என்றால் அது திமுக தான். சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர்களாகவே கொடுத்துக் கொள்ளக் கூடாது. அதை மற்றவர்கள் கொடுக்க வேண்டும். மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான் அரசியலில் சூப்பர் ஸ்டார்.
மழைக்காலத்தில் கோவை சாலைகள் அவ்வளவு மோசமாக உள்ளன. மழைக்காலம் முடிந்ததும் சாலை போடுகிறோம் என்கிறார்கள். சாலை மோசமாக இருப்பதால் பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன.” என்றார்.