வாழ்க்கையில் சில நேரங்கள் தனிமையை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். இந்த பரந்த உலகில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழும் நீண்ட நெடிய நிலப்பரப்பில் நமக்கென, நம்மைப் பற்றிச் சிந்திக்க, நம் நலனைத் தெரிந்துகொள்ள யாருமே இல்லை என்கிற உணர்வு நம் மனதைச் சிதைத்து விடும்.
52 ஹெர்ட்ஸ் திமிங்கலமும் மனிதர்களைப் போல சிந்திக்குமாயின், தினமும் இந்த தனிமையில் தான் நொந்துகொண்டிருக்கும். 52 ஹெர்ட்ஸ் என்பது என்ன? அது ஏன் உலகின் தனிமையான திமிங்கலமாக அறியப்படுகிறது என்பதைக் காணலாம்.
96 படத்தில் வரும் காதலே காதலே பாடலின் தொடக்கத்தில் திமிங்கலத்தின் இசையைக் கேட்க முடியும்.
நீலக்கடலின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டுவரும் அந்த திகிலூட்டும் சத்தத்தின் மூலம் தான் திமிங்கலங்கள் ஒன்றை ஒன்று தொடர்புகொள்ளும்.
நேரில் இதைக் கேட்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. கடல் பயணிகளுக்கே அரிதானது. ஆன்லைனில் திமிங்கல இசையைக் கேட்டு அனுபவிக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கிறது.
திமிங்கல சத்தத்தின் அதிர்வெண் பொதுவாக 15 முதல் 25 ஹெர்ட்ஸ்-ல் இருக்கும். ஆனால், இந்த தனிமையான திமிங்கலம் 52 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் சத்திமிடும். இந்த தனித்துவம்தான் அதன் தனிமைக்குக் காரணம். மற்ற திமிங்கலங்களால் இதன் சத்தத்தைக் கேட்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எப்படிக் கண்டறியப்பட்டது இந்த திமிங்கலம்?
இந்த திமிங்கலத்தை 1991ஆம் ஆண்டு கண்டறிந்தனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டறிவதற்காக ஆழ்கடலில் ஹைட்ராபோன்களை (hydrophones) அமெரிக்க ராணுவம் வைத்தது.
இவை ஆழ்கடலில் கேட்கும் சத்தத்தை ராணுவத்துக்குத் தெரியப்படுத்தும். அப்போது அதிக அளவு திமிங்கலங்களின் சத்தமும் ஹைட்ராபோனில் பதிவானது.
போருக்குப் பின்னர் ஹைட்ராபோன் பதிவுகளைக் கேட்க திமிங்கல ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதுதான் இந்த திமிங்கலத்தின் சத்தத்தை ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர். பின்னர் அதனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
இது குறித்து The Loneliest Whale: The Search for 52 என்ற ஆவணப்படம் 2021ம் ஆண்டு வெளியானது.
ஒரு சராசரி திமிங்கலம் எழுப்பும் சத்தம் 30,000 மைல்கள் வரை பயணிக்கும். இப்படியான சத்தங்களின் மூலம் உலகின் ஒவ்வொரு திமிங்கலமும் மற்றொன்றுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்கிறது.
இந்த மாபெரும் சத்த வலைப்பின்னலில் இருந்து அதிக சத்தத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது 52 ஹெர்ட்ஸ்.
தற்போதும் கலிபோர்னியா கடற்கரையில் சுற்றித்திரியும் அந்த திமிங்கலத்தை ஆய்வாளர்களால் கண்ணில் பார்க்க முடியவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

