Blue Hole: கடலுக்கு நடுவில் இருக்கும் மர்ம துளைகள் ஆபத்தானதா? – ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

நாம் வாழும் கிரகத்தில் பல அதிசயங்கள் இருக்கின்றன. மனித காலடித்தடம் படாத அடர்ந்த காடுகளும், கடலின் ஆழத்தில் இதுவரை நம் கண்களுக்கு எட்டாத உயிரினங்களும் வசிக்கின்றன. இப்படிப்பட்ட அதிசயங்களில் ஒன்றுதான் புளு ஹோல். கடலின் நடுவில் உள்ள ஒரு துளையால் குறிப்பிட்ட வட்டப்பரப்பு மட்டும் அடர்நீல நிறத்தில் இருக்கும்.

நிலத்தில் இப்படி ஆழமான துளை இருந்தால் அதனை சின்க் ஹோல் எனக் கூறுவர். அதுவே நீரில் புளு ஹோல் எனப்படுகிறது. இந்த புளு ஹோல்கள் 20ஆம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டன. அதுவரை இந்த துளைகள் இருக்கும் இடம் குறித்துப் பல மர்மமான கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்தன.

சீனர்கள் இந்த துளைகளுக்குக் கீழே டிராகன்களால் ஆளப்படும் புதிய உலகம் இருப்பதாக நம்பினர். மாயன்கள் இது பாதாள உலகத்துக்கான வாசல் எனக் கருதினர். உலகில் மிகச் சிறந்த டைவிங்க் ஸ்பாட்களில் ஒன்றாக இருக்கும் இந்த அதிசய இடம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

உலகில் பல புளு ஹோல்கள் இருந்தாலும் அதில் புகழ்பெற்றதாக இருப்பது அமெரிக்காவின் பெலிஸில் உள்ள தி கிரேட் புளு ஹோல் தான். பெலிஸ் நீல துளை 305 மீட்டர் விட்டமும், 120 மீட்டர் ஆழமும் உள்ள வட்ட துளை ஆகும். இதன் சுற்றுப்புறத்தில் பவளப்பாறைகள் வளர்ந்துள்ளன. உள்பக்கம் சுண்ணாம்பு பாறைகள் இருக்கின்றன.

2018ம் ஆண்டு ஆய்வாளர்கள் இந்த துளையில் இறங்கி ஆய்வு செய்ததன் மூலம் இதன் பின்னணியில் பல கட்டுக்கதைகளை உடைத்து அறிவியல் வெளிச்சம் பாய்ச்சினர்.

Diving

Blue Holes உருவானது எப்படி?

புளு ஹோல்கள் ஒரே நிமிடத்தில் உருவானது அல்ல. காலப்போக்கில் மெதுவாகவே இந்த வடிவத்தைப் பெற்றுள்ளது.

இந்த துளைக்குள் இருந்து நீர் வெளியேறுவதற்கென்று எந்த அமைப்பும் இல்லை. ஒரு முறை உள்ளே செல்லும் நீர் உள்ளேதான் இருக்கும்.

இங்கு எளிதில் கரையக் கூடிய பாறைகள் இருந்ததால் தண்ணீரால் அவை அரிக்கப்பட்டுத் துளை உருவானது எனக் கூறுகிறது சயின்ஸ் ஏபிசி தளம்.

பெரும்பாலான புளூ ஹோல்கள் ஐஸ் ஏஜின் இறுதியில் அதாவது 11,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கின்றன. அப்போது கடல் மட்டம் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. நிலத்திலிருந்த குகைகள் அல்லது சின்க்ஹோல்கள் கடல்மட்டம் அதிகரிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உருவானதே இந்த புளூ ஹோல்கள்.குகைகளிலிருந்த பாறைகள் அரிக்கப்பட்டு ஆழமான கடல் துளைகளாக உருவாகியிருக்கின்றன.
Cave Diving

புளூ ஹோல்களுக்குள் என்ன இருக்கிறது?

2018ம் ஆண்டு இந்த துளைக்குள் குதித்த ஆய்வாளர்கள் இதன் 3டி வடிவத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். உள்ளே குதித்த அவர்கள், முதலில் ஆமைகள், பவளப்பாறைகள் மற்றும் பாறை சுறாக்களைப் பார்த்திருக்கின்றனர். ஆழம் செல்ல செல்ல ஆய்வாளர்களால் உயிருள்ள எதையும் பார்க்க முடியவில்லை. 90 மீட்டர் ஆழத்தில் அவர்கள் கண்டது எல்லாம் நச்சு மிகுந்த ஹைட்ரஜன் சல்பைடு என்ற வேதிப்பொருள் மட்டுமே.

தொல்லியல் ஆராய்ச்சியில் நண்டு மற்றும் சங்கு ஓடுகள் கண்டறியப்பட்டன. இவை ஆழத்தில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் எனக் கண்டறிந்தனர். இன்னும் ஆழமாகச் செல்லும் போது கடலுக்குச் சம்பந்தமில்லாத ஸ்டாலாக்டைட்ஸ் (Stalactites) கண்டறியப்பட்டிருக்கிறது.

தி கிரேட் புளூ ஹோல் நிலத்தில் உருவாகி பின்னர் கடலால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

Blue Hole

புளூ ஹோல்கள் ஆபத்தானவையா?

புளூ ஹோல்கள் மிகச் சிறந்த டைவிங் தலங்களாக இருக்கின்றன என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தோம். இது தொல்லியல் ஆராய்ச்சிகள் மற்றும் அழிந்து போன உயிர்கள் பற்றிய தேடலில் ஈடுபடுபவர்களுக்குப் பிடித்தமான இடங்களாக இருக்கின்றன.

எகிப்து, பெலிஸில் உள்ள புளூ ஹோல்களின் ஆழத்தில் நீச்சலடிக்க வேண்டும் என்பது பல சாகச டைவர்களின் கனவாக இருக்கிறது. அதே நேரத்தில் எல்லா புளூ ஹோல்களிலும் நம்மால் டைவ் செய்ய முடியாது. செங்கடல், தாகாப் உள்ளிட்ட இடங்களில் உள்ள புளூ ஹோல்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.

இங்கு நீச்சலடிக்கத் துணிந்த 130 பேர் இதுவரை மரணித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01