“நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே… உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?”
“வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை தமிழ்நாட்டின் தலைப்பு செய்திகளாக மாற்றப்படுவதில், நாம் தமிழர் கட்சிக்கு எதிரான சதித்திட்டம் இருக்கின்றன. நா.த.க-வின் ஒவ்வொரு நகர்வுகளும் கவனிக்கப் படுகிறதென்றால், எங்கள் சூழலியல் போராட்டங்களும், அரசுக்கு எதிரான கேள்விகளும் விவாதமாக்கப்படுகிறதா? கட்சியின் நாளுக்கு நாள் சேர்ந்து வருகிறார்களே.. அதையும் புதியப் பொறுப்புகள் நியமிக்கப்படுவதையும் எங்காவது செய்திகளாக பார்க்கமுடிகிறதா? மாறாக விலகல் செய்திகள் மட்டுமே வருவதற்கு பின்னால் எங்களை சலனப்படுத்த வேண்டும் என உள்நோக்கமிருக்கிறது. அதேசமயம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சியின் பழைய கட்டமைப்பை கலைத்துவிட்டு கிளை வாரியாக கட்சியை கட்டமைத்து வருகிறோம். ஆக வெளியே சென்றவர்களெல்லாம் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.”
“கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதை எப்படி சதித்திட்டம் என்னச் சொல்ல முடியும்.. வீக்னஸை மறைக்க எதை எதையோ காரணமாக சொல்கிறீர்களா?”
“நாம் தமிழர் கட்சி முகவரியற்றவர்களுக்கும் குரலற்றவர்களுக்காகவும் இயங்கும் ஓர் அமைப்பு. அதோடு தனித்து நின்று தேர்தலுக்கு தேர்தல் வளர்வதோடு சட்டமன்ற தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் இடத்திலும் வெற்றியை நோக்கி நகரும் தருணத்தில் இருக்கிறோம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க நா.த.க-வில் சலனத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.. கீழ்த்தரமான முறையில் தனிப்பட்ட ஆடியோக்களை லீக் செய்து அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடும் அர்ப்பர் கூட்டம்தானே தி.மு.க”
“ஆட்சியிலிருக்கும் கட்சியான தி.மு.க-வுக்கு எம்.எல்.ஏ-வே இல்லாத நா.த.க-வை ஏன் உடைக்க முற்பட வேண்டும்?”
“மக்கள் விரோத பாசிச தி.மு.க அரசின் அவலங்களை சுட்டிக்காட்டி, கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்பதோடு, மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் களத்துக்கு சென்று போராடுவதால் திக்குமுக்காடுகிறது தி.மு.க. அதிலும் குறிப்பாக மலை, மண் சுரண்டலுக்கு எதிராகவும் பா.ஜ.க-விடம் இவர்கள் வைத்திருக்கும் மறைமுக உறவை தோலுரிப்பதனால் தி.மு.க-வுக்கு கோபம் வரத்தானே செய்யும். ஆனால் அரசியல் ரீதியாக நா.த.க-வை தொட்டுப் பார்க்க வழியில்லாதவர்கள் அவதூறுகளை கையிலெடுக்கிறார்கள். மொத்ததில் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராக சீமான் செயல்படுவதோடு மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக இருப்பதால் அஞ்சி நடுங்கி தூக்கம் தொலைத்திருக்கிறது தி.மு.க. அந்த பதற்றத்தில்தான். `யாராவது அதிருப்தியில் இருந்தால் தயவுசெய்து பேட்டிக் கொடுங்கள்` என மாவட்டம்தோறும் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்”
“நா.த.க பலவீனமாக இருக்கிறது.. சீமானுக்கு நிர்வாகத்திறனல்ல’ என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?”
“அப்படியல்ல.. கருணாநிதியும் ஜெயலலிதாவும் சர்வ அதிகாரத்துடன் இருந்தபோதே 2016-ல் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து 1.1% வாக்குகளில் தொடங்கி இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க கட்சியை கட்டமைத்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்பெற்ற அரசியல் கட்சியாக மாற்றியிருக்கிறார் என்றால் அவர் ஆகச் சிறந்த நிர்வாகியாக மட்டுமே இருக்க முடியும். வெற்று விமர்சனங்களால் சீமானை வீழ்த்த பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் பலிக்காது”
“கட்சியை நெழிவு சுழிவுடன் நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தும் சர்வாதிகாரத்துடன் கட்சி நடத்துகிறார் சீமான் என்கிறார்கள்?”
“நெழிவு சுழிவு என்பதன் அர்த்தம் கொள்கை சமரசம்தானே.. நா.த.க-வில் அதெல்லாம் வாய்ப்பில்லை”
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…