சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்டிரம்ப் தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை அறிவித்து வருகிறார். அதன்படி, தற்போது ட்ரம்ப், சுகாதாரச் செயலராக ராபர்ட் எஃப். கென்னடியை அறிவித்துள்ளார்.
I am thrilled to announce Robert F. Kennedy Jr. as The United States Secretary of Health and Human Services (HHS). For too long, Americans have been crushed by the industrial food complex and drug companies who have engaged in deception, misinformation, and disinformation when it…
— Donald J. Trump (@realDonaldTrump) November 14, 2024
யார் இந்த கென்னடி?
கென்னடியின் குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது ஆகும். இவரது அப்பா முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆவார் மற்றும் இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃ.ப் கென்னடியின் மருமகன் ஆவார்.
கடந்த ஆண்டு, ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக இவர் தான் தேர்தல் களத்தில் வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர், கமலா ஹாரிஸ் களத்திற்கு வர, இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அதன் பிறகு, தேர்தலில் இருந்து விலகி குடியரசு கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தற்போது, ட்ரம்ப் அமைச்சரவையில் சுகாதாரச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எதிர்ப்பு!
இவரை சுகாதாரச் செயலராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளது பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம், இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ஆவார். மேலும், இவர் தடுப்பூசி குழந்தைகளுக்கு ஆட்டிசத்தை ஏற்படுத்துகிறது… எய்ட்ஸ் நோயிற்கு ஹெச்.ஐ.வி காரணம் இல்லை என்பது போன்று நிரூபிக்கப்படாத பல மருத்துவம் சார்ந்த விஷயங்களைக் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் ஆவார்.
இவரை ட்ரம்ப் சுகாதாரச் செயலராக அறிவித்ததையொட்டி, அமெரிக்காவில் உள்ள பிரபல தொற்றுநோய் நிபுணர் ஒருவர், “போலியோ, தட்டம்மை போன்று 50 ஆண்டுகளுக்கு முன்பாக மறந்துபோன… கட்டுப்படுத்தப்பட்ட நோய்களை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறோம்” என்று அமெரிக்க ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.
Thank you @realDonaldTrump for your leadership and courage. I’m committed to advancing your vision to Make America Healthy Again.
We have a generational opportunity to bring together the greatest minds in science, medicine, industry, and government to put an end to the chronic…
— Robert F. Kennedy Jr (@RobertKennedyJr) November 14, 2024
இவரைப் பற்றி ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “சுகாதாரச் செயலராக ராபர்ட் எஃப்.கென்னடியை அறிவிப்பதில் மகிழ்ச்சி. நீண்ட காலமாக உணவு, தொழில்துறை, மருந்து துறைகளில் உள்ள மோசடிகள், தவறான தகவல்கள் மற்றும் குறைந்த தகவல்களால் அமெரிக்கர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். எந்தவொரு ஆட்சியிலும் சுகாதாரம் மிக மிக முக்கியமானது ஆகும். கென்னடி தனது செயல்பாடுகளால் அமெரிக்காவில் தொற்றுநோய்களை முடிவுக்குக் கொண்டுவருவார். மேலும் இவர் அமெரிக்காவை சிறப்பானதாகவும், மீண்டும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவார்” என்று பதிவிட்டுள்ளார்.