சென்னை குன்றத்தூரில், வீட்டில் எலித் தொல்லை காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால், 6 வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது சிகிச்சையில் இருக்கும் கிரிதரன் (34), பவித்ரா (32) ஆகியோர் குன்றத்தூரில் மணஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்களது பிள்ளைகள் வைஷாலினி (6), சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் கடந்த நான்கு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தனியார் வங்கியொன்றில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் வசித்து வரும் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால், தொலைபேசி மூலம் Rat Control நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர்.
அதன்படி, நேற்று முன்தினம் (13.11.24) மாலை 5 மணி அளவில் எலி மருந்து வைப்பதற்காக அந்த நிறுவனத்திலிருந்து வந்த இரண்டு நபர்கள், வீட்டில் எலி மருந்து வைத்து விட்டு, மேற்கொண்டு எலி வராமல் இருப்பதற்காக மருந்து தெளித்து விட்டுச் சென்றிருக்கின்றனர். இவ்வாறிருக்க அன்று நள்ளிரவு 12 மணியளவில் வைஷாலினிக்கு வாந்தி ஏற்பட்டிருக்கிறது.

பின்பு அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் அதிகாலை 3 மணிக்கு அனைவருக்குமே வாந்தி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலறிந்து காரில் வந்த அவருடைய நண்பர் மகேந்திரன், அனைவரையும் கோவூர் மாதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டனர்.

அதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மேல் சிகிச்சைக்காக போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் 2 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால் பரிதாபமாக இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோனதையடுத்து, போலீஸார் இதில் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.