ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க இருந்தது. ஆனால் தேர்தல்களில் அ.தி.மு.க-வுக்கு தோல்விதான் கிடைத்தது. மேலும் அந்த கட்சியின் தலைவர்கள் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து வந்தார். இதனால் கூட்டணி பிளவு பட்டது. தேசிய தலைமை பலகட்ட முயற்சிகள் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை இருகட்சிகளும் தனித்தனியாகச் சந்தித்தன. முடிவில் அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். தம்பி அண்ணாமலைக்குதான் அதில் விருப்பம் இல்லை. இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்கலாம்” என்றார்.
இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சை வெடித்தது. இருப்பினும் அ.தி.மு.க-வை இழுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக தமிழிசை ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக “எந்த கட்சியை தோற்கடிக்க போகிறோம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருக்க கூடாது” என பேசி அடுத்த அஸ்திரத்தை வீசியிருக்கிறார்.

சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் இணைக்கப்பட்டு மக்கள் விரோத தி.மு.க ஆட்சி அகற்றப்படும்” என்றார்.
இதனால் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பிருப்பதாக கருத்து பரவியது. இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பா.ஜ.க-வுடன் இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை. இன்றும் இல்லை, நாளையும் இல்லை, எப்போதும் இல்லை. இது அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. கழகத்தால் முடிவு எடுக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளரே அறிவித்துவிட்டார்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெய்குமாருக்கும் என்ன சூழல் மாறியது என தெரியவில்லை. 2026-க்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு அழகான வார்த்தையை சொன்னார்.. ‘ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்’ என்றார். ஒத்த கருத்து என்றால் என்ன.. மக்கள் விரோத தி.மு.க ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் இன்று எதிர்க்கட்சிகளின் ஒத்த கருத்தாக இருக்கிறது. இந்த ஒத்த கருத்துள்ளவர்கள் ஒத்து போய் வந்தால் நல்லது என்பதுதான் எனது கருத்து. எடப்பாடி அண்ணனே இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்று சொன்னார். அதற்குள் அண்ணன் ஜெயக்குமார் போன்றவர்கள் எதற்கு முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என தெரியவில்லை.

பா.ஜ.க கூட்டணியில் பலர் வந்து சேர்ந்து கூட்டணி அமைக்கலாம். தி.மு.க- கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி வந்து எதிர் கூட்டணியில் சேரலாம். எனவே 2026 தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும்போது தி.மு.க-வே தங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்றாக வர வேண்டும் என்பதில்லை. பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்று வந்தால் கொள்கைகள் மாறுபடலாம். எந்த கட்சியை தோற்கடிக்க போகிறோம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருக்க கூடாது. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே எங்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள்தான். எனவே அரசியல் சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். 2026-ல் வலுவான கூட்டணி அமையும்” என்றார்.
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. ஆட்சியில் இருந்து தி.மு.க-வை அகற்ற வேண்டும் மற்றும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஊடகங்கள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்கள் செய்துள்ளார். தற்போது கூட கரப்பான்பூச்சி என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும், நிலையையும் மறந்து இது போன்ற விமர்சனங்களை செய்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் தான் தற்போது தி.மு.க ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி நிறைவேற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழிசையின் கருத்துப்படி தி.மு.க-வை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வியூகம் அமைக்குமா என்கிற கேள்விக்கு பதிலளித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அண்ணாமலை தலைவராக இல்லையென்றால் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது தமிழிசை தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவர் தலைவராக வருவதற்கான ஆசையாகவே இதை பார்க்க வேண்டும். திமுக வீழ்த்த வேண்டும் என்கிற ஒத்த கருத்து இருந்தால் போதும் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என தமிழிசை நினைக்கிறார். ஆனால் அதனை அ.தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழிசை தலைவராக வேண்டும் என்கிற ஆசை இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தற்போது அமையுமா என சொல்ல முடியாது. எடப்பாடி திரும்ப திரும்ப இல்லையென்றுதான் சொல்கிறார்.
ஆனால் அவரை கார்னர் செய்தார்கள் என்றால் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்குள் இருந்து அழுத்தம் வந்தால் எடப்பாடி கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும். வேலுமணி, தங்கமணி, காமராஜ் போன்றவர்கள் பல வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் தேசிய கட்சியுடன் கூட்டணியில் இல்லை. சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் கிடைக்கவில்லை. எனவே எதற்காக பா.ஜ.க-வின் வாக்குகளை இழக்க வேண்டும். நமக்கு 10,000 ஓட்டுக்கள் வந்தாலே போதும் என நினைத்துவிட்டால் கூட்டணி வைப்பார்கள். எனவே போக போகத்தான் நிலைமை தெரியவரும்” என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
