கிண்டி மருத்துவருக்கு கத்திகுத்து: `மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது’ – உதயநிதி

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.

பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவரை கத்தியால் குத்தியவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபட உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal