அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விமர்சித்து வருகிறார்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை வைத்துள்ளார். ஊர்ந்து, பறந்து, கரப்பான்பூச்சி என்றெல்லாம் கூறியுள்ளார். ஸ்டாலின் தன் பதவியை மறந்து இப்படி விமர்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது குறித்து உதயநிதியுடன் விவாதம் செய்ய எங்கள் கட்சியில் பல முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால் எதற்காக உதயநிதி பதில் சொல்கிறார்.

இதன்மூலம் ஸ்டாலின் திறமை இல்லாத, பொம்மை முதல்வராக இருக்கிறார் என்ற விமர்சனத்தில் தவறில்லையே. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரே ஒரு முதல்வர் தான் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் நான்கு முதல்வர்கள் உள்ளனர்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரத்தோடு செயல்படுவதில்லை. இதனால் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. தேர்தல் கூட்டணி சம்மந்தமாக பேசுவதற்கு இன்னும் நேரம் உள்ளது.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. இதை ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்றார்.