`மன்னிக்கலாமா… தண்டிக்கலாமா?’ – குழப்பத்தில் எடப்பாடி; முரண்டு பிடிக்கும் தளவாய்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த தளவாய் சுந்தரம், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றுவரையில், அவரிடத்திற்கு புதிய பொறுப்பாளரும் நியமிக்கப்படவில்லை, தளவாய்க்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படவும் இல்லை.

என்னதான் நடக்கிறது தளவாய் விவகாரத்தில்..?

தளவாய் நீக்கம் உத்தரவு

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சீனியர்கள் சிலர், “கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்த தளவாய் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. ‘பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நாம் அறிவித்திருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணியை அவர் எப்படி தொடங்கிவைக்கலாம்?’ எனக் கட்சிக்குள்ளேயே பலரும் தலைமை வரை புகார்களை அனுப்பினர். அதன் தொடர்ச்சியாக, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார் தளவாய் சுந்தரம்.

கட்சி வட்டாரத்தில் பெரும் புயலை இவ்விவகாரம் கிளப்பிய நிலையில், தளவாய் மட்டும் அசரவில்லை. ‘என்னை நீக்கினார்கள் என்றால், போகலாம் ரைட் என கடந்துவிட வேண்டியதுதான்’ எனக் கூலாக பேட்டியளித்தார். தற்காலிக நீக்கத்திற்குப் பிறகு தன் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமையிடம் அவர் நேரில் அளிக்கவில்லை.

கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்களை விசாரிக்க, 2011-ல் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்தார் அம்மா. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அக்குழுவின் மீதே புகார்கள் வரிசைக்கட்டவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும் மனுக்கள் பரிசீலனைக் குழுவும் கலைக்கப்பட்டன. அன்றிலிருந்து, கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்களை விசாரிக்க அமைப்புச் செயலாளர்கள் அந்தஸ்த்தில் இருப்பவர்களை வைத்து ஒரு குழு அமைக்கப்படும். கட்சியின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்த பிறகு, துணைப் பொதுச் செயலாளர்களான கே.பி.முனுசாமியும் நத்தம் விஸ்வநாதனும்தான் ஒழுங்கு நடவடிக்கைப் புகார்களை விசாரிக்கிறார்கள். இதுவரையில், தளவாய் சுந்தரத்தை அழைத்து அவர்கள் விசாரணையும் நடத்தவில்லை. விளக்கமும் கேட்கவில்லை.

தளவாய் சுந்தரம்

தளவாய்யை நிரந்தரமாகக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு ரொம்பவே தயங்குகிறார் எடப்பாடி. அதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கின்றன. கட்சிப் பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக தளவாயை நீக்கிவிட்டால், அவர் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிடுவாரோ என தலைமை சந்தேகிக்கிறது. அப்படி அவர் சென்றால், அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகும். மீண்டும் ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கு வலுவுடன் கன்னியாகுமரியில் அ.தி.மு.க இல்லை. தவிர, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருக்கும் நிலையில், ஒருவேளை பா.ஜ.க-வுக்கு தளவாய் சென்றுவிட்டால், அதன் தாக்கம் தென்மாவட்டங்களில் எதிரொலிக்கலாம்.

இரண்டாவது, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவானதிலிருந்து அவருக்கு நெருக்கமாக இருந்துவந்தது கே.பி.முனுசாமி, சேலம் இளங்கோவன், தளவாய் சுந்தரம் ஆகிய மூவர்தான். கட்சி மேலிடத்தின் அத்தனை நகர்வுகளையும் அறிந்தவர் தளவாய். அவரை நிரந்தரமாக நீக்குவதென்பது, மேலிடத்தின் வியூகங்கள் கசியவும் வழிவகுக்கலாம். அதனால்தான், உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ரொம்பவும் குழம்பிப் போயிருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் அட்டைகள் வழங்குவதிலும் பூத் கமிட்டிகள் அமைப்பதிலும் மாவட்டச் செயலாளர்கள் பலரும் சுணக்கம் காட்டுவதாக தலைமை வரை புகார் வந்துள்ளது. அந்தப் பணிகளை விரைவுப்படுத்தத்தான், கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஒருமாதமாக மாவட்டச் செயலாளரே இல்லாமல் அல்லாடிப் போயிருக்கிறது கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம். கட்சி ரீதியான பல பணிகளும் அம்மாவட்டத்தில் தேங்கிப் போயிருக்கின்றன.

இதற்கிடையே, ‘நான் என்ன தவறு செய்தேன்… என் தொகுதிக்குள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு நான் தானே போக வேண்டும்’ என முரண்டுபிடித்து நிற்கிறார் தளவாய் சுந்தரம். அவர்மீது என்ன சந்தேகம் இருந்தாலும், அழைத்துப் பேசினால்தான் தெரியவரும். அவர் விவகாரத்தில், ‘தண்டனையா.. மன்னிப்பா..’ என்பதை தலைமைதான் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இனி, தி.மு.க-வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க கட்சித் தலைமை ஆலோசித்துவரும் நிலையில், ஒரு மாவட்டச் செயலாளர் பணியிடம் காலியாக இருப்பது சரியல்ல” என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal