`மோடி, அமித் ஷா பைகளைச் சோதித்தீர்களா?’ – தேர்தல் அதிகாரிகள் மீது உத்தவ் தாக்கரே பாய்ச்சல்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்திற்காக யவத்மால் சென்ற போது அவரது பேக்கை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானது. இது குறித்து சிவசேனா(உத்தவ்) கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதிகாரிகள் சோதனை செய்த வீடியோவை உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். அதில் சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம் அவர்களது பெயர் என்னவென்று உத்தவ் தாக்கரே கேட்கிறார். அவர்கள் பெயர் சொன்னவுடன் உங்களது வேலையை பாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். சோதனை செய்யுங்கள். என்ன வேண்டுமோ சோதித்துக்கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேக்குகளை சோதிக்கிறீர்களா? என்று கேட்கிறார்.

உடனே அதிகாரிகள் இல்லை சார் என்று சொல்கிறார்கள். எனது பேக்குடன் ஹெலிகாப்டர் எரிபொருள் டேங்க், சிறுநீரக பெட்டிகளையும் சோதனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷாவின் பேக்குகளை சோதனை செய்தால் அந்த வீடியோவை எனக்கு அனுப்புங்கள் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “அவர்கள் சோதனை செய்ததில் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் தங்களது கடமையை செய்கிறார்கள்” என்றார். சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஏக்நாத் ஷிண்டேயை தேர்தல் அதிகாரிகள் சோதித்தார்களா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அவர்களது பேக்கில் துணிகள் மட்டும்தான் இருக்கிறதா? அவர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் பார்வையாளர்கள் பார்க்கவில்லையா? எங்களது லக்கேஜ், ஹெலிகாப்டர், விமானம், கார் உட்பட அனைத்தையும் சோதிக்கிறார்கள். எங்களது வீடுகளைக்கூட சோதிக்கிறார்கள்.

இது பாரபட்சமற்ற முறையில் நடந்தால் இதில் எங்களுக்கு எந்த வித பிரச்னையும் இல்லை. அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் இடங்களுக்கு ரூ.25 கோடி சென்றுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க சோசியல் மீடியா பிரிவு நிர்வாகி அமித் மால்வியா, “தேர்தல் கமிஷன் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் மிரட்டி இருக்கின்றனர். உத்தவ் தாக்கரே பயன்படுத்தி இருக்கும் வார்த்தை தெருச்சண்டையை விடமோசமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனா(ஷிண்டே) நிர்வாகி இது குறித்து அளித்துள்ள பேட்டியில், ”மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் சோதனை செய்வதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே இன்று லாத்தூர் சென்ற போதும் அவரது பேக்கை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது இது வரை எத்தனை பேரை சோதித்தீர்கள் என்று உத்தவ் தாக்கரே கேட்டதற்கு, நீங்கள்தான் முதல் ஆள் என்று தேர்தல் பார்வையாள்ரகள் தெரிவித்தனர்.