விஜய்யின் ‘த.வெ.க’ முதல் மாநாட்டிற்குப் பிறகு ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமார் விஜய்யை கடுமையாகத் தாக்கிப் பேசிவருகிறார்.
சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரின் சமீபத்திய செயல்பாடுகள் விஜய்யின் எதிர்ப்பாகவே மாறியிருக்கிறது. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகி விஜய்யின் ‘த.வெ.க’ கட்சியில் இணைவதாகச் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் ‘த.வெ.க’ கட்சியால் வரும் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதற வாய்ப்பிருப்பதாகப் பல்வேறு பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் கட்சியில் நாம் தமிழர் கட்சியினர் சேருவது குறித்தும் ‘அமரன்’ திரைப்படத்தில் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ‘நா.த.க’ ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விஜய்யின் ‘த.வெ.க’ கட்சியால் என் வாக்கு சிதறாது. எனக்கு வாக்களிப்பவர்கள் தெளிவானவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள். என்னுடைய வாக்காளர்கள், என்னைப் பின் தொடர்பவர்கள் பொழுதுபோக்குத் தளங்களில் தலைவர்களைத் தேடுபவர்கள் அல்ல. போராட்டங்களத்தில் தலைவர்களைத் தேடுபவர்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் பறக்கும் பதர்கள் எனக்கு வாக்கு செலுத்தமாட்டார்கள். புயலே அடித்தாலும் உறுதியாக இருக்கும் தூய நெல் மணிகள்தான் எனக்கு வாக்குச் செலுத்துவார்கள். ஆகையால் யாராலும் என்னுடைய வாக்கை சிதறடிக்க முடியாது.
விஜய் கட்சி ஆரம்பித்ததைப் பார்த்து பயந்துவிட்டார் சீமான் என்று சிலர் பேசுகிறார்கள். ஜெயலலிதா – கலைஞர் என இருபெரும் தலைவர்கள் இருந்தபோதே அவர்களை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவன் நான். அப்படியிருக்க இன்று புதியாக வந்த விஜய்யைப் பார்த்து நான் ஏன் பயப்படப்போகிறேன். நாம் தமிழர் கட்சியிலிருந்து நிறையபேர் விலகி, வேறு கட்சியில் சேர்ந்ததாக வதந்திகள் பரவுகிறது. அவர்களை எல்லாம் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அட்டையைக் காட்டச் சொல்லுங்கள்…
உண்மை தெரிந்துவிடும். 2026 தேர்தல் மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் ‘நாம் தமிழர் கட்சி’ தனித்துதான் போட்டியிடும். நாங்கள் எங்கள் கால்களை நோக்கிப் பயணிப்பவர்கள், அடுத்தவர்கள் கால்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அல்ல” என்று பேசியிருக்கிறார்.

மேலும், ‘அமரன்’ திரைப்படம் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய வெறுப்போடும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்படத்தை சீமான் பாராட்டியுள்ளதாகவும் சர்ச்சையாகும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த சீமான், “ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அமரன்’. அப்படத்தில் வேறெந்த உள்நோக்கமும் இருப்பதாக நான் கருதவில்லை. இது ராணுவ வீரரின் பயோ-பிக்; படத்தைப் படமாகப் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.