தமிழக முதலமைச்சர் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்ற தி.மு.க பிரமுகர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, மற்றொரு சம்பவமாக, வரவேற்பு கொடிக் கம்பம் அகற்றும் பணியில் ஈடுபட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகரை அடுத்த பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்சி தொண்டர்கள், பயனாளிகள், ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணனோர் வந்திருந்தனர். அதன்படி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மகாராஜபுரத்தை சேர்ந்த முத்தையா (வயது 49) என்பவரும் முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூலித்தொழிலாளியான முத்தையா, தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். அவருக்கு, அதிக கடன் பிரச்னை உள்ளதென கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்கிருக்கும் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்தவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க முடியாத வருத்தத்தில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியேவந்து பட்டம்புதுார் சந்திப்பில் வைத்து பூச்சி மருந்தை கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, முத்தையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு சம்பவமாக, முதல்வரை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டு நாட்களாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், இன்று (10.11.24) சென்னை புறப்பட்டு புறப்பட்டு சென்றார். முதல்வரின் நிகழ்ச்சி நிறைவு பெற்றதையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் முதல்வரின் வரவேற்புக்காக நடப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. இதில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பள்ளியையொட்டி அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி (39), சக்தி வேல்( 36), நவீன் குமார் (28), ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது கொடிக்கம்பம் அருகே சென்ற உயரழுத்த மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் தூக்கிவீசப்பட்டு காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்” என்றனர்.