விருதுநகர் மாவட்டத்தில் ரோடு ஷோ, பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் சந்திப்பு, ஆதரவற்றோர் இல்லம் செல்லுதல் என கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இதை விமர்சிக்கும் வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக செய்தி வெளியிடப்படுகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன் என்ற விவாதமும் நடைபறுகிறது.
மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சராக காட்டிக் கொள்வதற்கு ரோடுஷோ போன்ற முயற்சி பலன் அளிக்கவில்லை. காகிதப் பூ மணக்காது என்பதைப்போல இந்த ரோடு ஷோ மக்களுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25 சகவிகிதம் முதல் 100 சகவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதேநேரம் மக்களுக்கு செய்து தரவேண்டிய சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, சுகாதார வசதி, கல்வி வசதி செய்து தரப்படவில்லை.
வரியை உயர்த்தியவர்கள் மேலும் ஆண்டுக்கு 6 சகவிகிதம் வரி உயர்த்தப்படும் என்கிற செய்தி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல உள்ளது. ரோடுஷோ நடத்தும் முதலமைச்சர், ஆண்டுக்கு 6 சதவிகித வரி உயர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பாரா?

மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி சதுர அடிக்கு டி கிரேடு பிரிவில் 70 பைசா, சி கிரேடு பகுதியில் ஒரு ரூபாய், பி கிரேடு பிரிவில் 2 ரூபாய், ஏ கிரேடு பிரிவில் 3 ரூபாய் இருந்த நிலையில் தற்போது டி பிரிவு நீக்கப்பட்டு கட்டடங்களுக்கு சதுர அடிக்கு 9 ரூபாய், 6 ரூபாய், 3 ரூபாய் என்ற அடிப்படையில் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. இவ்வளவு வரி உயர்த்திய பின் மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக, சாலை மேம்பாட்டுக்காக, குடிநீருக்காக ஏதேனும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்களா என்றால் இல்லை.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தை இன்னும் இவர்கள் நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பை ஏற்று மூன்றரை ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. மதுரைக்கு 10 நாளைக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் உளவுத்துறை மூலம் உண்மையை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் குப்பையை அள்ள ஆள் பற்றாக்குறை உள்ளதால் தேங்கிக் கிடக்கிறது. வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வரியை உயர்த்தாமல் அரசே ஏற்றுக்கொண்டது, மின்சார கட்டணத்தை எட்டு ஆண்டுகளாக உயர்த்தவில்லை. ஆனால் தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவில் வீட்டு வரி, குப்பை வரி, சாக்கடை வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து விளம்பரம் மூலம் மறைக்க முயற்சி செய்கிறார்கள்.
துன்பப்பட்டு கண்ணீர் வடிக்கும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் வாழ்விலே உங்களால் ஒளியேற்ற முடியுமா? செயற்கையாக நீங்கள் நடத்துகிற அந்த சந்திப்புகள் எல்லாம் என்ன விளைவை தந்துவிடப் போகிறது? மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் சொத்து வரி உயர்வு ரத்து என்று அறிவிப்பை வெளியிடுங்கள். செய்ய மாட்டீர்கள், மக்கள் மீது உண்மையான அக்கறை உங்களிடம் இல்லை? மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அப்போது மக்களின் சுமையை தன் சுமையாக ஏற்றுக்கொள்வார்

இன்றைக்கு அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது போராட்டத்திற்கு ஓடோடி சென்று ஆதரவு அளித்த அந்த ஸ்டாலின் எங்கே என்று ஆசிரியர், அரசு ஊழியர்கள், விவசாய பெருமக்கள் கேட்கிறார்கள்.
கபட நாடகமாடிய ஸ்டாலின் எங்கே ஓடி ஒளிந்தார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். தன்மானம் உள்ள ஸ்டாலினை இப்போது பார்க்க முடியவில்லை. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியைத் தருவதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மாணவர்கள், பொதுமக்கள் தயாராகி விட்டார்கள், எதிர்க்கட்சி தலைவராக இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டார்கள். விருதுநகரில் விளையாட்டு காட்டிய ஸ்டாலின் அவர்களே, உங்கள் திருவிளையாடலை தமிழ்நாட்டு மக்கள் நம்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.