கோயிலில் வழிபட்ட பிரியங்கா, பாதிரியாரிடம் ஆசிபெற்ற பாஜக வேட்பாளர் வயநாட்டில் ஓயும் பிரசாரம்

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் நாளை மறுநாள் (நவ.13) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே ராகுல் காந்தி வயநாடு எம்.பி-யாக இருந்தார்.

அவர் கடந்த தேர்தலில் ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற நிலையில் வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து நடக்க உள்ள இடைத்தேர்தலில் யு.டி.எஃப் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார். எல்.டி.எஃப் கூட்டணியில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த சத்யன் மொகேரியும், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த நவ்யா ஹரிதாசும் போட்டியிடுகிறார்கள்.

பாதிரியாரிடம் ஆசிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்

மும்முனை போட்டியில் வயநாட்டில் அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா திருநெல்லி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலைச் சுற்றி வலம் வந்து வழிபட்டார். 1991-ம் ஆண்டு பிரியங்கா தந்தை ராஜிவ் காந்தியின் அஸ்தி இக்கோயிலின் அருகில் உள்ள பாவநாசினி நதியில் கரைக்கப்பட்டது என்பதால் இதற்கு முன் ராகுல் காந்தியும் இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளார். பிரியங்கா காந்தி கோயிலில் வழிபாடு நடத்திய போட்டோக்களை காங்கிரஸ் நிர்வாகிகள் பகிர்ந்தனர்.

பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் திருவம்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சர்ச்சுக்குச் சென்று பாதிரியாரிடம் ஆசிபெற்றார். அந்த போட்டோக்களை பா.ஜ.க-வினர் பகிர்ந்து வருகின்றனர். அதுபோன்று சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொகேரி நேற்று மானந்தவாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொகேரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் இறுதிகட்ட பிரசாரம் தீவிரமடைந்திருக்கிறது. இன்று மாலை பிரசாரம் நிறைவு செய்யும் கலாசக்கொட்டு பேரணியில் அனைத்துக் கட்சியினரும் தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக மாஸ் ஊர்வலம் நடத்துவார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தும் கலாசக்கொட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளார்.