`எடப்பாடி விவாதத்துக்கு என்னை அழைத்தால் செல்வேன்…’ – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை, ‘சாம்பியன் கிட்’ விளையாட்டு உபகரணங்களை முதற்கட்டமாக 500 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த திட்டங்கள் உங்களுக்காக முதல்வரால் உருவாக்கப்பட்ட திட்டங்கள். இதை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் முதன்மையான மாநிலமாக விளங்க வேண்டும். எஸ்.டி.டி.ஏ பயிற்சியாளர்களான உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.

உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வராக மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைப் பெற்றுத் தருவேன். விளையாட்டுத்துறையில் சாதிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அவர்களுக்காக மட்டும் விளையாடவில்லை. அவர்களின் குடும்பத்துக்காக, அவர்களின் ஊருக்காக, இந்த மாநிலத்துக்காக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னைக்கு அருகில் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. நிலப் பிரச்னை இருந்தது. அதனால்தான் தாமதமானது. அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். என்னை அழைத்தால் நான் செல்வேன்.

உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து கலைஞர் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவது விமர்சிக்கப்படுகிறது… பொதுவாக விமர்சனம் என்றால் வரத்தான் செய்யும். வேறு யார் பெயரை வைப்பது… யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம். மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. அரசு தன் பணிகளை சிறப்பாக செய்துவருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.