இலங்கை: `தமிழர் நிலம் மீட்டுத் தரப்படுமா?’ – பிரசாரத்தில் அதிபர் அநுரா குமார திசநாயக்க பேசியதென்ன?

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் அநுரா குமார திசநாயக்க வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்ற நாள்முதல், இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மீது அவரின் நிலைப்பாடு என்ன, இந்தியாவின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை புதிய அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பது விவாதத்துக்குள்ளானது.

அனுர குமார திசநாயக்க

இந்த நிலையில், நவம்பர் 14-ம் தேதி இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அநுரா குமார திசநாயக்க, “உங்களுடைய சொந்தப் பிரதிநிதிகள் உங்கள் பகுதிகளை வழிநடத்தவும், ஆளவும் முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். யாழ்ப்பாணத்தில் நாங்கள் வெறும் 27,000 வாக்குகளை மட்டுமே பெற்றோம். தமிழ் பேசும் மக்களுக்கு எங்களின் செய்தியை நன்றாகத் தெரிவிக்காததும்… தெற்கில் செய்த அளவுக்கு வடக்கில் கடினமாக உழைக்காததுமே இதற்குக் காரணம்.

நமது நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றும் முயற்சியில் யாழ்ப்பாண மக்கள் உங்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைக்கிறேன். 30 வருட நீண்ட போருக்குப் பின்னர் நாட்டில் கண்ணீர் மற்றும் அன்புக்குரியவர்களின் இழப்புகளைத் தவிர வேறொன்றுமில்லை. அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நாங்கள் நம்பிக்கையை உருவாக்குவோம்.

அனுரகுமார திசநாயக்க

மேலும், இந்திய விசைப்படகுகளை இலங்கை கடற்பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம், மீன்பிடிக்க விடமாட்டோம். இதுபோன்ற செயல்களால், நம் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார். மேலும், இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள், அரசால் பறிக்கப்பட்ட தங்களின் நிலங்களை மீட்கப் போராடிக்கொண்டிருப்பதாகவும், அவற்றைத் தான் மீட்டுத்தருவதாகவும் இந்தக் கூட்டத்தில் அநுரா குமார திசநாயக்க உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது

நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.