கடைசிநாள் பிரசார பொதுக்கூட்டம்; மும்பை சிவாஜி பார்க் மைதானத்திற்கு போட்டி போடும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பா.ஜ.க சார்பாக பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா முழுக்க தொடர்ச்சியாக தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அகோலாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, மாநிலங்களை காங்கிரஸ் அரச குடும்ப ஏ.டி.எம் மெஷின்களாக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலுக்கு பணிந்துவிடக் கூடாது என்று பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். நவிமும்பையில் நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். இத்தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் அனல் பறக்கிறது. மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானம் எப்போதும் தேர்தல் பிரசாரத்திற்கு மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

ராஜ், உத்தவ்

இந்த மைதானத்திற்கு அரசியல் கட்சிகளிடையே எப்போதும் போட்டி இருக்கும். வரும் 18ம் தேதி தேர்தல் பிரசாரம் முடிய இருக்கிறது. அதற்கு முன்பு 17ம் தேதி தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரேயும், அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயும் மாநகராட்சியிடம் விண்ணப்பம் செய்துள்ளனர். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜி த்பவார்) கட்சிகள் சிவாஜி பார்க்கில் தேர்தல் பிரசார கூட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்கி இருக்கிறது. இப்போது தாக்கரே சகோதரர்கள் கொடுத்திருக்கும் மனுக்கள் நிலுவையில் இருக்கிறது. இதில் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே சிவாஜி பார்க் இருக்கும் மாகிம் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே 17ம் தேதி பொதுக்கூட்டம் ராஜ் தாக்கரேயிக்கு மிகவும் முக்கியம் ஆகும்.

இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி கூறுகையில், “சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த 4 மனுக்கள் வந்திருக்கிறது. அவற்றை நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மற்றும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் மீது அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இருவருக்குமே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த சிவாஜி பார்க்கில் அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாதர் சிவாஜி பார்க்கில் ஆண்டில் 45 நாள்கள் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுக்கப்படும். ஏற்கெனவே வரும் 14ம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசார கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதில் 45 நாள்கள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கட்சிகளுக்கு சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம் ராஜ் தாக்கரே மகன் மாகிம் தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதியில் போட்டியிடும் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேயோ அல்லது அவரது மகன் ஆதித்ய தாக்கரேயோ இதுவரை எந்தவித தேர்தல் பிரசார கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் உத்தவ் தாக்கரே மாகிம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். 2022, 2023ம் ஆண்டுகளில் தாதர் சிவாஜி பார்க்கில் தசரா அன்று பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையிலான சிவசேனாக்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பம் செய்தது. ஆனால் இரண்டு மனுக்களையும் மாநகராட்சி தள்ளுபடி செய்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவிட்ட பிறகு உத்தவ் தாக்கரே தசரா அன்று தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி கொடுத்தது. இந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தாதர் சிவாஜிபார்கிற்கு உரிமை கோரவில்லை. ஆசாத் மைதானத்தில் ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டம் நடத்தினார். தாதர் சிவாஜி பார்க் சிவசேனாவிற்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த சிவாஜி பார்க் மைதானத்தில்தான் மறைந்த பால் தாக்கரே சிவசேனாவை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.