கரூர், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க கரூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று அ.தி.மு.க கரூர் மாவட்ட அவை தலைவர் திருவிகா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
“தமிழக வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதைப் பார்த்து வாக்களிப்பார்கள். அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைப் பார்த்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க-வுக்கு தேர்தலில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. அரசியல் கட்சிகள் என்றாலே தேர்தலில் தோல்வியைச் சந்தித்து தான் ஆக வேண்டும். அ.தி.மு.க என்ற பெரிய இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க-வில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க ஆட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. குறைந்த சதவிகித வாக்குகளில்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளனர்.
முதலமைச்சரை தமிழக மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலை தற்பொழுது தமிழகத்தில் இல்லை. தொலைக்காட்சி வாதங்களில் பொய்யான பிரசாரத்தை தி.மு.க-வினர் மிரட்டி பரப்பி வருகின்றனர். அ.தி.மு.க தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தால், மீண்டும் அது அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடையும். அதேபோலத்தான் தி.மு.க மிகப்பெரிய வெற்றியை தேர்தலில் அடைந்தால் அடுத்து மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது சரித்திரமாக உள்ளது. அ.தி.மு.க தொண்டர்கள் தைரியமாக இருங்கள்… 2026 – ல் ஆட்சி அமைக்கப்போவது அ.தி.மு.க தான். தி.மு.க அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு எந்த சிறந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. விளம்பரத்தில் தான் தி.மு.க ஆட்சி கவனம் செலுத்தி வருகிறது. அரசியலில் எப்பொழுதும் ஜாம்பவானாக எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாது. சூழ்நிலைகள் மாறும்.
எனவே, வரும் 2026 – ல் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார். அதற்காக, சிறப்பான கூட்டணி தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்படும். இப்பொழுதே சட்டமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி அமைக்க நல்ல கட்சிகள் நம்மை அணுகி பேசி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என உயர்த்தப்பட்டதால் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. சொத்து வரி மட்டும் 150 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஆறு சதவிகிதம் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. நடுத்தர தொழில்கள் நலிந்துவிட்டன. தி.மு.க-வுக்கு வாக்கி அளிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் கூட நேற்று தி.மு.க ஆட்சியை அகற்றுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தி.மு.க ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், அதிகளவிலான சட்ட கல்லூரிகள், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிக்க 7.5% இட ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியது, தமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை செயல்படுத்திக் காட்டிய அரசு அ.தி.மு.க அரசுதான். அத்திக்கடவு அவிநாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கத் திட்டம் உள்ளிட்டவை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. எனவே, தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். வரும் 2026 – ல் செந்தில் பாலாஜியாக இருந்தாலும் சரி, மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.