பெண்களுக்கான பிரதிநிதித்துவம்…
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி சார்பாக 29 பெண்களும், ஆளும் மஹாயுதி கூட்டணி சார்பாக 26 பெண்களும் மட்டுமே போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா முழுவதும் 4120 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அவர்களில் 359 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அதாவது மொத்த வேட்பாளர்களில் 10 சதவீதம் கூட பெண்கள் கிடையாது. பிரதான ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் மொத்தம் 55 பெண் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தி இருக்கின்றனர். பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 3-ல் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் அதைப்பற்றி அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
அதேசமயம் மகாராஷ்டிராவில் ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால் தேர்தலில் பிரதிநிதித்துவம் கொடுக்க மறுத்து வருகின்றன. புனே மாவட்டத்தில் உள்ள பார்வதி தொகுதியில் தான் அதிக பட்சமாக 7 பெண்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் பெண்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர்.
அவுரங்காபாத்தில் 6 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையில் உள்ள குர்லா தொகுதியில் அதிக பட்சமாக 5 பேர் போட்டியிடுகின்றனர். பெண் வேட்பாளர்களுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் மோசமாக விமர்சனம் செய்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.க நிலை…
மகாராஷ்டிரா முழுக்க பா.ஜ.க 90 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவில் 105 பேர் வெற்றி பெற்ற நிலையில் 15 பேருக்கு மீண்டும் பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்து பா.ஜ.க துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,”நாங்கள் நடத்திய அறிவியல் பூர்வ கணக்கெடுப்பில் 50 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்”என்றார்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மகாராஷ்டிரா தேர்தல்களில் பா.ஜ.கவிற்கு இறங்கு முகமாகவே இருக்கிறது. மக்களவை தேர்தலில் கூட பா.ஜ.க மோசமான தோல்வியையே சந்தித்தது. எனவே வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு இருப்பதாக அரசியல் ஆய்வாளர் பிரவின் தெரிவித்துள்ளார்.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பா.ஜ.க உடைத்தது என்ற கெட்ட பெயரும் வாக்காளர்கள் மத்தியில் இருக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சிகள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அவ்வாறு வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் அவர்கள் கட்சி மாற தயார் நிலையில் இருந்தனர்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் மாற்றம்..
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று தேசியவாத காங்கிரஸ் (ஷிண்டே) தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர்களில் ஒருவரான திலிப் வல்சே பாட்டீல் கூறுகையில், ”தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. மகாராஷ்டிரா அரசியல் எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை கணிக்க முடியாத நிலை இருக்கிறது.

தேர்தலுக்கு பிறகு அணியில் மாற்றம் ஏற்படலாம். தேர்தலுக்கு பிறகுதான் எதையும் உறுதியாக சொல்ல முடியும். தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அந்நேரத்தில் அரசியல் கட்சிகள் அணி மாறலாம்” என்றார்.
திலிப் வல்சே பாட்டீல் அம்பேகாவ் தொகுதியில் 7 முறை வெற்றி பெற்று இருக்கிறார். இம்முறை தனது மகளை தேர்தலில் நிறுத்த முயன்றார். ஆனால் கட்சி தலைமை திலிப் வல்சே பாட்டீலிடம் மீண்டும் தேர்தலில் நிற்கும்படி கேட்டுக்கொண்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb