உலகப் பணக்காரரான எலான் மஸ்க் எப்போதும் இல்லாத அளவு இந்த தேர்தலில் மும்முரமாகச் செயல்பட்டார். ட்ரம்ப்புக்கு ஆதரவாக மேடைகளில் பேசினார். கூட்டங்களில் கலந்துகொண்டார். டிவிட்டரையே ஒரு பிரசார மேடையாக மாற்றியதுடன் எதிர்க்கட்சியினரைக் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்தார். அமெரிக்கர்களிடம் இருந்த எலான் மஸ்கின் இமேஜ் இந்த தேர்தலில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் ஒரு கோடீஸ்வரர் ஏன் தோட்டாக்கள் பறக்கும் ட்ரம்ப்பின் மேடைகளில் உரக்கப் பேச வேண்டும்? எலான் மஸ்க் இந்த தேர்தல் ஆதரவுக்கு விலையாகப் பல சலுகைகளை எதிர்பார்த்தார். விரைவில் அவருக்கு அவை கைகூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவை அமெரிக்காவில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்?
எலான் மஸ்கும் ஒழுங்குமுறை ஆணையங்களும்!
மஸ்க் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், பல நிறுவனங்களில் முதலீடும் செய்திருக்கிறார். எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியுரா லின்க், தி போரிங் கம்பனி ஆகியவை அவரது முதன்மையான நிறுவனங்கள்.
இவற்றுள் எழும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குறைந்த வரி விகிதங்கள் போன்ற ஒழுங்குமுறை சிக்கல்களிலிருந்து தளர்வு கிடைக்கக் கூடும். மேலும், அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா உடன் இணைந்து செயல்படும் வகையில் பல அரசு காண்ட்ராக்ட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கடந்த அக்டோபர் 18ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தில் தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் வாட்நட் நிறுவனங்கள் ஒடுக்குமுறைகளைச் சந்திப்பதாக மஸ்க் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. மற்றொரு பிரசார கூட்டத்தில் ட்ரம்ப் தனது அரசாங்கம் முக்கிய நிறுவனங்களுக்கான சுமைகளைக் குறைக்கும் என்று பேசியுள்ளார். இவற்றுக்காக மஸ்க் செய்த முதலீடுதான், ட்ரம்ப் பிரசாரத்துக்கு அவர் நன்கொடையாக வழங்கிய 118 மில்லியன் டாலர்கள் என்கின்றனர்.
இத்துடன் அரசின் ஆலோசகராக மஸ்க் நியமிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி அரசின் பகுதியாக அவர் அமரும்போது அவரது தொழில்களை ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்புகளில் அவர் தாக்கம் செலுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்கா – மஸ்க் – சீனா
இவற்றுக்கு அப்பால், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவன முதலீடுகளைப் பாதுகாக்கவும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறையுடன் விண்வெளி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் தனது அரசியல் செல்வாக்கை மஸ்க் பயன்படுத்தினால், இது இன்னும் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க அதிகாரிகள், அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொருளாதார ரீதியில் அமெரிக்காவின் போட்டியாளராக இருக்கும் நாடு சீனா. சீனாவிலிருந்து பிரிந்து, தனிநாடாக இயங்க முயல்கிறது தைவான். சீனாவை அமெரிக்கா எதிர்த்து தைவானுக்கு ஆதரவளித்து வருகிறது.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அதன் சீன தொழிற்சாலையையே பெருமளவில் நம்பியிருக்கிறது. ஒருமுறை சீனா சென்ற எலான் மஸ்க், தைவானை ‘சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எலான் மஸ்க் முன்னரே ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைப்பேசியில் பேசியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுடன் மஸ்க் உடன்படுவதில்லை. எனவே, மஸ்க் தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கம் செலுத்த முற்படலாம் என என்.பி.சி தளத்தில் சில அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்காவின் முக்கியமான கவலைகளில் ஒன்று. குறிப்பாக, ராணுவ தொழில்நுட்பங்களில் சீனா புதிய உச்சங்களை எட்டுவதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க அரசுக்கு உள்ளது. ஆனால் எலான் மஸ்க்கின் நவீன தொழில்கள் சீனாவையும் நம்பியே இருக்கின்றன.
ட்ரம்ப் – எலான் மஸ்க்கின் நெருக்கம்!
மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளித்துறையில் மோனோபோலியாக வளர்ந்து வருகிறது. பல அரசு மற்றும் தனியார் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் வணிகத்தை விரிவுபடுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் எலான்.
இப்போது ட்ரம்ப்புக்கு நெருக்கமான தொழிலதிபராகியிருக்கும் எலான் மஸ்க் அவரது நிறுவனத்துக்குப் போட்டியான போயிங் உள்ளிட்ட நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது. முன்னரே மஸ்க் போயிங் நிறுவனத்தை விமர்சித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப் ஒரு நேர்காணலில், “எலான் ஸ்மார்ட்டான மனிதர். அவர் கேபினடில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவரைச் செலவின குறைப்பு செயலராக நியமிப்பேன்” என்று கூறியிருக்கிறார். எலான் மஸ்க்கும் ஒரு பொதுமேடையில் அமெரிக்காவின் அரசு பட்ஜெட்டில் இருந்து 2 ட்ரில்லியன் டாலர்களை குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
போயிங் நிறுவனமும் பிற பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகப் பணத்துக்கு ஒப்பந்தங்கள் பெறுவதாக மஸ்க் குற்றம் சாட்டியிருந்தது இங்குக் கவனிக்க வேண்டியது.
மஸ்குக்கு வரிச் சலுகை!
டிரம்ப் பிரசாரத்தின் மூத்த ஆலோசகர் பிரையன் ஹியூஸ், “எலான் மஸ்க் மக்களின் வரிப்பணம் சரியாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்க வேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார்” என்று என்.பி.தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தனது முந்தைய ஆட்சியிலேயே பணக்காரர்கள் மற்றும் கார்பரேட்டுகளுக்கான வரியைச் சரமாரியாகக் குறைத்தார். மறுபுறம் கமலா ஹாரிஸ் பணக்காரர்களுக்கான வரியை உயர்த்தினார். வெளிப்படையாகவே மஸ்க் ட்ரம்ப்புக்கு ஆதரவளிக்க வரிச் சலுகைகள் முக்கிய காரணம் என்று நாம் அறியலாம்.

எலான் மஸ்க் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
-
நீதித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து, பாதுகாப்பு நிர்வாகமானது டெஸ்லா காரின் தானியக்க பைலட் அம்சங்கள் மீது கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், டெஸ்லாவின் தானியக்க அம்சங்கள் மனிதர்கள் ஓட்டுவதை விடப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று மஸ்க் வாதாடி வருகிறார்.
-
டெஸ்லா நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக மஸ்க் தனது வீட்டில் செலவிட்டார் என்ற வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தியின் அடிப்படையிலான வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஊழியர்களை நியமிப்பதில், வீடற்றவர்கள் மற்றும் அகதிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாக்க தொடுக்கப்பட்ட வழக்கை நீதித்துறை விசாரித்து வருகிறது.
-
டெஸ்லாவின் கலிபோர்னியா ஆலையில் கறுப்பின ஊழியர்கள் மீதான துன்புறுத்தலை அனுமதித்ததாகச் சம வேலை வாய்ப்பு ஆணையம் (Equal Employment Commission) வழக்கு தொடர்ந்துள்ளது.
-
அதே கலிஃபோனியா ஆலையில், தொழிற்சங்கம் அமைப்பதற்கான தொழிலாளர்களின் உரிமைகளை மீறியதாகத் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (National Labor Relations Board) மஸ்க் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது.
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் 8 பேரைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பணி நீக்கம் செய்ததாகவும் மஸ்க் மீது குற்றச்சாட்டு உள்ளது.
-
இப்போது எலான் மஸ்க் ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றி வைத்திருக்கும் டிவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கும்போது மோசடியில் ஈடுபட்டாரா என்ற விசாரணையும் நிலுவையில் உள்ளது.
இன்னும் சில வழக்குகளை எலான் மஸ்க்கும் அவரது நிறுவனங்களும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வழக்குகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் வேறு வழிகளில் மஸ்க் எதிர்கொள்ளலாம் என்கின்றனர் அமெரிக்க அரசியல் வட்டாரத்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs