Doctor Vikatan: அருகம்புல் சாறு போலவே பிரபலமாகும் கோதுமைப்புல் சாறு… எல்லோருக்கும் ஏற்றதா?

Doctor Vikatan: அருகம்புல் சாறு போலவே சிலர் கோதுமைப்புல் சாறு அருந்துவதைப் பார்க்கிறேன். அது உண்மையிலேயே ஆரோக்கியமானதா… யார், எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நம் மக்களிடம் அருகம்புல் பிரபலமாக இருக்கும் அளவுக்கு, கோதுமைப்புல் பிரபலமாக இல்லை. ஆனால், சமீப காலமாக கோதுமைப்புல் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது.

கோதுமைப்புல்லை முளைகட்டிய பயறு வகையோடு ஒப்பிடலாம். பயறு வகைகளை முளைகட்டிப் பயன்படுத்துவது போலவே, கோதுமையை முளைக்கச் செய்து, அதன் துளிர் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அருகம்புல் சாற்றோடு ஒப்பிடும்போது, கோதுமைப்புல் சாறு சற்று அடர்த்தியாக இருக்கும் என்பதால், அதை அரைத்து ஜூஸாக்கும்போது, நிறைய தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. புற்றுநோய்க்கு காரணமான செல்களைத் தடுக்கும் ஆற்றல், கோதுமைப்புல்லுக்கு உண்டு என்பதாக நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் ஏற்பட்டவர்கள், கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் நிலையில், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கோதுமைப்புல்லுக்கு பங்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மை கொண்டதால், மூட்டுவலி உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கோதுமைப்புல்

புற்றுநோயாளிகள் மட்டுமன்றி, உடல் நலிந்தவர்கள், எப்போதும் சோர்வாக உணர்பவர்கள் போன்றோருக்கும் கோதுமைப்புல் சாறு கொடுக்கும்போது எனர்ஜி கூடுவதாக, அதைப் பயன்படுத்தியவர்கள் அனுபவபூர்வமாகச் சொல்வதையும் கேட்க முடிகிறது. அதனால் இதன் பயன்பாடு சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கோதுமைப்புல்லை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்துவது போலவே, பவுடராக்கியும் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளின் பாரம்பர்ய மருத்துவத்தில் கோதுமைப்புல் ஒரு மருந்தாகவே பரிந்துரைக்கப்படுகிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வளிக்கும். வயதானவர்களும் எடுத்துக்கொள்ளலாம். சரும நோய்களை குணப்படுத்தி, சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கும் தன்மையும் கோதுமைப்புல்லுக்கு உண்டு. இதிலுள்ள அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கவல்லவை. அருகம்புல் மாதிரி, கோதுமைப்புல்லை தினமுமோ, அடிக்கடியோ எடுத்துக்கொள்ளாமல், தேவை ஏற்படும்போது மட்டும் பயன்படுத்துவது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.