கடந்த 5-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் களம் கண்டனர். பல மாதங்களாகவே தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று (நவம்பர் 6) வெளியான தேர்தல் முடிவில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறார்.
இதையடுத்து புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “குடியரசுக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி அமெரிக்காவின் பொற்காலம். எனவே இதை அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த அற்புதமான வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். வரும் காலங்களில் இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும். வருங்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் ஒவ்வொரு அமெரிக்கரும் இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார். இதற்கிடையில் மீண்டும் ட்ரம்ப் பதவிக்கு வந்திருப்பது இந்தியாவுக்குச் சாதகமா, பாதகமா என்கிற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், “இந்திய வம்சாவளியைச் சேர்த்தவர் என்பதால் கமலா ஹாரீஸ் வெற்றிபெற வேண்டும் எனப் பலரும் விரும்பினார்கள். ஆனால் துணை அதிபராக இருந்தும் இந்தியா, அமெரிக்க உறவை மேம்படுத்தக் கமலா பெரிய அளவில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவே அவர் அதிபராகியிருந்தால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகை செய்திருக்கிறது.

அதாவது அவர் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஹார்லி டேவிட்சன் பைக் விவகாரம், காற்று மாசுபாடு போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘இந்தியா துஷ்பிரயோகம் செய்யும் நாடு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியாவில் கடுமையான வரி விதிக்கப்படுகிறது. நான் மீண்டும் வெற்றி பெற்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும்” எனக் கொதித்திருந்தார்.
கடந்த வாரம், மிச்சிகனில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், “சீனாவில் வணிகம் செய்ய விரும்பினால், இங்கே பொருட்களைத் தயாரித்து அங்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பிறகு அந்த பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிப்பார்கள். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இந்தியாவும் இப்படிதான் செய்தது. 200 சதவீதம் வரி விதிப்பால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை அங்கு விற்க முடியவில்லை” எனப் பேசியிருந்தார். அதேநேரத்தில் சீனாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற பிறகு இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்துவார்.
இது இந்தியாவுக்குச் சாதகமாகவே அமையும். குறிப்பாக ராஜாங்க ரீதியிலான உறவுகளில் இது இந்தியாவுக்குப் பயனுள்ளதாக அமையும். தேசியவாதம், தேசபக்தி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் ட்ரம்ப்பும், மோடியும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இதனால் உறவில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. சமீபத்தில் ட்ரம்ப் தெரிவித்த தீபாவளிக்கு வாழ்த்தில், “கமலா மற்றும் ஜோ (ஜோ பைடன்) அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களைப் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலிலிருந்து உக்ரைன் வரை மட்டுமல்லாது, நமது தெற்கு எல்லை வரை பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர்.
தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்க இந்துக்களையும் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுடனும், எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடனுமான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் ட்ரம்ப் அதிபராகியிருப்பதற்கு பா.ஜ.க-வினர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரத்தில் முன்னதாக அதிபராக இருந்த காலகட்டத்தில் ட்ரம்ப், ஹெச்1பி விசா முறையிலும் பல மாற்றங்களைச் செய்திருந்தார். இந்த முறை ஹெச் 1 பி விசாக்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க டிரம்ப் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்தியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், “ட்ரம்ப்பின் அரசியல் நகர்வுகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. முன்னதாக, “அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றங்களைத் தடுக்க எல்லை முழுவதும் பெருஞ்சுவர் எழுப்ப வேண்டும்” எனப் பேசி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். கொரோனா நேரத்தில், “சானிடைசர்களை ஊசி மூலம் நேரடியாக மனித உடலுக்குள் செலுத்திக்கொள்ளலாமே” எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.
கடந்த முறை தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒற்றைக் காலில் நின்றார். அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பலமுறை நீதிமன்ற படியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுமட்டும் இல்லாமல் தேர்தல் பரப்புரையில் இரண்டு முறை கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். எனவே வரும் காலங்களில் சர்ச்சைக்குப் பஞ்சம் இருக்காது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.